நன்றி குங்குமம் டாக்டர்
தமிழ்த்திரையுலகில் 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹரிஷ்கல்யாண். அதைத்தொடர்ந்து சட்டப்படி குற்றம், பொறியாளன், பியார் பிரேமா காதல், இஸ்ரெட் ராஜாவும் இதயராணியும், கசடதபற போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டவர் ஹரிஸ்.
இவரது நடிப்பில் சமீபத்தில் லப்பர் பந்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, நூறு கோடி வானவில், டீசல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஹரிஸ் கல்யாண் தனது ஃபிட்னெஸ் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார். ஒர்க்கவுட்ஸ்: நான் ஒரு ஃபிட்னெஸ் ஆர்வலர் என்றே சொல்லலாம். அதிலும் நடிகனாக இருப்பதால், என்னை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஃபிட்னெஸிற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
பொதுவாக அனைவருமே ஃபிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஏனென்றால், நோய் நோடி இல்லாமல் மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழக்கையை வாழ வேண்டும் என்றால் அதற்கு உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது என்று கருதுகிறேன். எனவே, தினசரி பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். வாரத்தில் மூன்று நாட்கள் ஜிம் சென்று பயிற்சி செய்கிறேன். மற்ற நாட்களில் வீட்டிலேயே பயிற்சி செய்வேன். பயிற்சி முடித்ததும் அரை மணியிலிருந்து ஒருமணி நேரம் யோகா செய்வேன். எனது ரோட்டீனில் ஒருநாள் ஓர்க்கவுட்டோ யோகாவோ தவறினாலும் அந்த நாள் முழுவதுமே எனக்கு சரியாக போகாத மாதிரியே இருக்கும்.
எனது தினசரி பயிற்சிகளில் கட்டாயம் கார்டியோ பயிற்சிகள் இருக்கும். அதைத் தொடர்ந்து எடையை நிர்வகிக்கும் பயிற்சிகள், தசைகளை வலிமையாக்கும் சில பயிற்சிகளையும் வழக்கமாக மேற்கொண்டு வருகிறேன். அதைத் தவிர்த்து புல் – அப்ஸ், புஷ் – அப்ஸ் மற்றும் கால்களை வலுவூட்டும் சில பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். இதுதவிர, சைக்கிளிங், நடைப்பயிற்சியும் உண்டு. பொதுவாக ஒவ்வொருவருமே தினசரி சிறிது நேரமாவது ஏதேனும் சின்ன சின்ன உடற்பயிற்சிகளையாவது செய்யவேண்டும். அதுபோன்று யூடியூபில் பார்த்து புத்தகங்களில் படித்து என்று உடற்பயிற்சிகளை செய்யாமல், முறையாக ஒரு டிரைனரிடம் சென்று உங்கள் உடலமைப்பு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை தேர்ந்தெடுத்து அதனை தினசரி வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.
டயட்: இப்போ எல்லாம் யாரைப் பார்த்தாலும் அந்த டயட்டில் இருக்கிறேன் இந்த டயட்டில் இருக்கிறேன் என்று சொல்வது சகஜமாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை டயட் என்பது ஒன்றுமில்லை, ஆரோக்கியமான பேலன்ஸ் உணவை உண்டாலே போதுமானது என்று நினைக்கிறேன். அந்த வகையில், எனது ஓர்க்கவுட்ஸ் மற்றும் டயட் இரண்டையும் சரிசமமாக பராமரித்து வருகிறேன். பொதுவாக எனது தினசரி டயட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் சம அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். அதுபோன்று வெள்ளை சர்க்கரை, பால், மைதா போன்றவற்றை தவிர்த்து விடுவேன். குளிர் பானங்கள் எதுவும் அருந்தவதில்லை. குளிர்ந்த தண்ணீரைக் கூட குடிக்கமாட்டேன். நிறையபேர் வெள்ளை அரிசியை தவிர்த்து விடும்படி கூறுகிறார்கள். ஆனால், அது தேவையில்லை, அளவோடு அரிசி சாதம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
நான் தினசரி கடைபிடிக்கும் டயட் முறை இதுதான். காலை எழுந்ததும் மஞ்சள் கலந்த தண்ணீர் ஒரு டம்ளர் அருந்திவிட்டுதான் மற்ற எந்த உணவு பொருளையும் சாப்பிடுவேன். அதுபோன்று எனது உணவு வேளையை ஐந்தாக பிரித்து சாப்பிடுவேன். அதாவது, காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒருமுறையும், மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடையில் ஒரு முறையும் என்று பிரித்துக் கொள்கிறேன். இதில் காலை உணவை கொஞ்சம் ஹெவியாக சாப்பிடுவேன். மதிய உணவு அளவோடு இருக்கும். இரவில் மிகவும் குறைவான உணவையே எடுத்துக் கொள்வேன். அதுபோன்று, இரவு உணவு 9.30க்குள் முடித்து விடுவேன்.
இதுதான் எனது தினசரி உணவு வழக்கம். சில நேரங்களில் சரியாக டயட் ஃப்லோ பண்ண முடியவில்லை என்றால் அந்த வாரத்தில் ஒருநாள் ஒருவேளை உணவு மட்டுமே எடுத்துக் கொள்வேன். மற்றபடி எல்லா உணவுகளையும் சாப்பிடுவேன். சவுத் இந்தியன் உணவுகளான இட்லி, தோசை – சாம்பார், பிரியாணி என எல்லாமே விரும்பி சாப்பிடுவேன். சில நேரங்களில் வெளிநாடுகள், வெளியூர்கள் போகும்போது, அந்த ஊரின் பாரம்பரிய உணவுகள் எப்படி இருக்கும் என்று ருசித்துப் பார்ப்பேன்.
என்னை பொருத்தவரை யார் ஒருவருமே ஒரு டயட்டை ஃபாலோ செய்யும் முன் அந்த டயட்க்கான முறை உங்களது உடலமைப்புக்கு சரியாக வருமா என்று தெரிந்து கொண்டு பின்னர், அதனை ஃபாலோ செய்வது மிகவும் நல்லது. பிட்னெஸை பொருத்தவரை உடற்பயிற்சி, உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6- 8 மணி நேர தூக்கம் அவசியம். தூக்கம் சரியாக இருந்தால்தான், உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்
The post ஹரிஷ் கல்யாண் ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.