×
Saravana Stores

கல்லீரல் புற்றுநோய்க்கான காரணிகள் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

கல்லீரல், பித்தப்பை மருத்துவர் ஜாய் வர்கீஸ்

உடலில் உள்ள உறுப்புகளின் அரசன் என்றால் அது கல்லீரல்தான். உடல் எனும் மாபெரும் தொழிற்சாலையில் கழிவுத் தொழிற்சாலை அதுதான். நாம் உண்ணும் உணவை செரித்து, உடலுக்கு ஏற்ற சத்தாக மாற்றி, எஞ்சிய கழிவை வெளியேற்றி உடல் எனும் இயந்திரம் நில்லாமல் ஓடும் பணியை அல்லும் பகலும் செய்யும் அற்புத உறுப்பு. இந்த கல்லீரலில் வாழ்வியல் காரணமாகவும் நமது மரபணு காரணமாகவும் பல்வேறுவிதமான கோளாறுகள் உருவாகின்றன. அவற்றில் ஒன்று கல்லீரல் புற்றுநோய். உடலையே முடக்கி, உயிரைப் பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய நோய் இது. இதைப் பற்றி இங்கு காண்போம்.

நடப்பு ஆண்டில் உலக அளவில் உள்ள பொதுவான புற்றுநோய்களில் 6வது இடத்தில் கல்லீரல் புற்றுநோய் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஆண்களைப் பொறுத்தவரை ஐந்தாவது பொதுவான புற்றுநோயாகவும், பெண்களில் ஒன்பதாவது பொதுவான புற்றுநோயாகவும் உள்ளது. கல்லீரல் புற்றுநோய் மற்றும் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகம் உள்ள 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பல்வேறு புதிய காரணிகள் காரணமாகவும் இறப்புகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் கல்லீரல், பித்தப்பை சிகிச்சை பிரிவு இயக்குனர் மருத்துவர் ஜாய் வர்கீஸ் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

கல்லீரல் புற்றுநோய் தொடர்பாக வேதனை தரும் விஷயம் என்னவென்றால், இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 70 முதல் 80 சதவீதம் பேர் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளனர். எனவே இதற்கு சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆரம்ப நிலையில் நோயின் அமைதியான தன்மை மற்றும் அவை எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப நிலையை வயிற்று ஸ்கேன் மற்றும் சில ரத்த பரிசோதனைகள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

பல்வேறு வகையான கல்லீரல் புற்றுநோய்கள் உள்ளன. அவற்றில் ஹெபடோசெல்லுலர் கார்சினோமா மிகவும் பொதுவானது. ஏற்கனவே கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு, சிரோசிஸ், ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி போன்ற சில வைரஸ் தொற்றுகள், அதிக உடல் எடை, மது அருந்துதல் மற்றும் சில மரபணு நோய்கள் காரணமாக இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது மற்ற புற்று நோய்களைப் போலவே குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்படலாம். சமீப காலமாக, மாறிவரும் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், அதிகமான மக்கள் கல்லீரல் கொழுப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது முறையாகக் கவனிக்கப்படாத போது, ​​கல்லீரல் புற்றுநோயை உருவாக்குகிறது.

கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள்

பொதுவாக நோயின் மிகவும் முற்றிய நிலையிலேயே அறிகுறிகள் தெரியவரும். இதன் பொதுவான அறிகுறிகளில் வயிற்று வலி, உடல் எடை குறைவு, பசியின்மை, மஞ்சள் காமாலை, குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை முக்கிய அறிகுறிகள் ஆகும். சில நோயாளிகளுக்கு ரத்த வாந்தி, வயிறு மற்றும் கால் வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.

கல்லீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய ஒரே வழி, அதற்கான ஆபத்து காரணிகள் உள்ளவர்கள் முறையான பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும். எனவே சிரோசிஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்று, ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய் மற்றும் குடும்பத்தில் யாரேனும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவரது வாரிசு என அனைவரும் பரிசோதனைகளை செய்து கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறு செய்யும்போது நோய் இருப்பது கண்டறியப்பாடல் அதற்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்து அதை குணப்படுத்திவிடலாம். இந்த பரிசோதனை வயிற்று அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் எளிய ரத்தப் பரிசோதனைகள் மூலம் செய்யப்படுகிறது.

மேலும், கல்லீரல் புற்றுநோய் மிகவும் ஆபத்தானது என்று உலக அளவில் பொய்யான தகவல் ஒன்று நிலவி வருகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், கல்லீரல் புற்றுநோயை அறுவை சிகிச்சை மூலம் கட்டியை மட்டும் அகற்றுவது அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும்.

சில சமயங்களில், முதுமை, இதய நோய் அல்லது நுரையீரல் நோய் அல்லது மயக்க மருந்துக்கான அதிக ஆபத்து போன்ற பிற காரணங்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போகலாம். இத்தகைய சூழ்நிலைகளில், சிறிய கட்டிகளை அகற்ற ரேடியோ அதிர்வெண் நீக்கம் அல்லது நுண்ணலை நீக்கம் அல்லது கிரையோதெரபி ஆகியவை மூலம் குணப்படுத்தலாம்.

புதிய தொழில்நுட்பங்கள்

கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க தற்போது புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த முறையில் செய்யப்படும்போது, அதில் குறைந்தபட்ச மயக்க மருந்து தேவை, குறைந்தபட்ச பக்க விளைவுகள், விரைவான மீட்பு மற்றும் தினசரி பராமரிப்பு நடைமுறைகளாக செய்யப்படலாம். இந்த நடைமுறைகளில் கீமோதெரபி மருந்தை நேரடியாக ரத்த நாளத்தில் செலுத்துதல், கட்டிக்கு குவிக்கப்பட்ட கதிர்வீச்சு மற்றும் டிரான்ஸ்-ஆர்டரியல் ரேடியோ எம்போலைசேஷன் ஆகியவை அடங்கும். டிரான்ஸ்-ஆர்டரியல் ரேடியோ எம்போலைசேஷன் நடைமுறையில், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் யட்ரியம் என்னும் மருந்து கட்டிக்குள் செலுத்தப்படுகிறது. இது பீட்டா கதிர்களை வெளியிடுவதன் மூலம் கட்டியை மெதுவாக அழிக்கும்.

மேலும் குறைவான பக்கவிளைவுகளுடன் புற்றுநோய் செல்களை அழிக்கும் பல புதிய வாய்வழி மருந்துகளும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், புற்றுநோய் செல்களுக்கு எதிராக நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மாற்றியமைத்து அதிகரிக்கும் மருந்துகள், இதன் விளைவாக இம்யூனோதெரபி எனப்படும் புற்றுநோய் செல்களை அழித்து, கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் சமீபகாலமாக ஒரு பெரிய திருப்புமுனையாக உள்ளது.

ஆரம்ப நிலைகளை அறுவை சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதால், மேலே குறிப்பிட்டுள்ள ஆபத்து காரணிகள் உள்ளவர்கள் முறையாக பரிசோதனைகள் செய்து கொள்வதே சிறந்த வழியாகும். கல்லீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் புதிய நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்குக்கூட, அது மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தலாம். பயத்தை ஏற்படுத்தும் பாரம்பரிய கீமோதெரபி போலல்லாமல், கல்லீரல் புற்றுநோய்க்கான தற்போதைய மருந்துகள் குறைந்த பக்க விளைவுகளுடன் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குகின்றன.

The post கல்லீரல் புற்றுநோய்க்கான காரணிகள் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Liver ,Joy Varghese ,
× RELATED மருந்தாகும் உணவுகள்!