நன்றி குங்குமம் டாக்டர்
இதயம்… நாம் வாழ நமக்காக எப்போதும் துடிக்கும் ஓர் அற்புத உறுப்பு. இதுவே ஒரு மனிதன் உயிரோடிருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும். அதில் ஏதேனும் வித்தியாசம் தென்பட்டால் அது உடல் நலத்தில் ஏதோ பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கான அடையாளமாக கருதப்படும். அந்த வகையில் சீரற்ற இதயத் துடிப்பு என்பது இதயத்தில் ஏற்பட்டிருக்கும் ஏதோ பிரச்னையின் அறிகுறியாகும். இது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்தியர்களிடம் காணப்படும் சீரற்ற இதயத்துடிப்புப் பிரச்சினை மற்ற நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்குச் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.
அத்துடன் அவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் கடுமையானதாகவும் இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சீரற்ற இதயத்துடிப்பு எதனால் ஏற்படுகிறது. அதற்கான தீர்வு என்ன.. என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரசாந்த மருத்துவமனையில் இன்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்ட் ஆலோசகராக இருக்கும் மருத்துவர் டி. தியானிஸ்வர் சீரற்ற இதயத்துடிப்பு என்றால் என்ன?
பொதுவாக ஒரு மனிதனுக்கு ஒரு நமிடத்திற்கு இதயத்துடிப்பு 70- 100க்குள் இருக்க வேண்டும். அதுவே, இதயதுடிப்பு மிக வேகமாகவோ, மிக மெதுவாகவோ அல்லது சீரற்றோ இருப்பது அசாதாரண நிலையாகும். இதயத்தில் இருக்கும் வால்வுகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டது. இது ஒவ்வொரு முறை சுருங்கி விரியும்போது ஏற்படும் ஓசையைதான் நாம் லப்டப் என்று சொல்கிறோம்.
அந்தவகையில் இதயம் ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டே இருக்கும் அதுவே, ஒரு சிலருக்கு இதயம், ஒருநொடிக்கும் அடுத்த நொடிக்கும் இடையில் துடிக்கும் தன்மை சில விநாடி தாமதாக வரும். அல்லது சிலருக்கு மிக வேகமாகத் துடிக்கும். அல்லது சிலருக்கு வேகமாக துடித்து அப்படியே மெதுவாகலாம் அல்லது மெதுவாகத் துடித்து வேகமாகலாம். இதைத்தான் சீரற்ற இதயத்துடிப்பு என்று சொல்கிறோம்.
இந்த சீரற்ற இதயத்துடிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதேசமயம், குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கும் பெரியவர்களுக்கு ஏற்படுவதற்கும் நிறைய காரணங்கள் உண்டு. அதேசமயம் இந்த காரணங்கள் வெவ்வேறாகவும் இருக்கலாம்.
அறிகுறிகள்
சீரற்ற இதயத்துடிப்பின் முக்கிய அறிகுறி என்றால் அவை, படபடப்பாக இருப்பதுதான். இந்த படபடப்பு வரும் போது சிலருக்கு தலை சுற்றல், சிலருக்கு வாந்தி, சிலருக்கு மயக்கம் ஏற்படலாம். சிலருக்கு கண்பார்வை மங்கலாகலாம். சிலருக்கு தலை பாரமாக இருப்பது போன்று தோன்றும். சிலருக்கு வியர்வை அதிகமாக வரலாம். சிலருக்கு நெஞ்சுவலி வரலாம். அதுபோன்று சிலருக்கு இரவில் தூங்கும்போது மட்டும் இந்த படபடப்பு வரக்கூடும். அதுவும் இடதுபுறம் திரும்பிப் படுக்கும்போது இந்த படபடப்பு வரும். படபடப்புடன் ஏற்படும் மற்ற அறிகுறிகளை வைத்துதான் ஒருவருக்கு எவ்வளவு தீவிர பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிவோம்.
காரணங்கள்
இதயத்தில் நான்கு அறைகள் இருக்கும். இந்த நான்கு அறைகளில் இருக்கும் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டாலோ அல்லது நாளங்களில் ஏதேனும் சரியாக மூடாமல் கசிவு ஏற்பட்டாலோ படபடப்பு வரலாம். இதனால் இதயத்துடிப்பு சீரற்றுக் காணப்படும். அடுத்ததாக, இதய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளால் படபடப்பு வரலாம். அதாவது ஹார்ட்அட்டக் வருவதற்கான ஆரம்பநிலையில் இதுபோன்ற படபடப்பும் சீரற்ற இதயத்துடிப்பும் ஏற்படலாம். அல்லது இதய அடைப்பு முற்றிய நிலையில் இருக்கும் போது இதுபோன்ற படபடப்பு வரலாம். அதுபோன்று இதய ரத்தக் குழாய்களில் பிரச்னை ஏற்படுவது அல்லது ரத்த நாளங்களில் பிரச்னை ஏற்படுவது அல்லது இதய தசைகளில் வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது இதுபோன்ற படபடப்பு வரலாம்.
இதுதவிர, நான்காவதாக இதயத்தில் ஒரு மின்கலம் எனப்படும் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் இருக்கிறது. அதன்வழியாகத்தான் இதய தசைகள் செயல்படுகிறது. இதனால், ஒரு மனிதனுக்கு இதயத்தை எடுத்து வெளியே வைத்தாலும், அதனால் துடிக்க முடிகிறது. அந்த சர்க்யூட்டில் ஏதேனும் பிரச்னை ஏற்படும்போது படபடப்பு, சீரற்ற இதயதுடிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இதைத்தான் மருத்துவ உலகில் அரித்மியா என கூறுவோம். இந்த அரித்மியா என்பது ரிதம் என்று சொல்லப்படும். இந்த ரிதம் வேகமாக இருந்தால் டாக்ரிக்கார்டியா அரித்மியா என்றும் மெதுமாக இருந்தால் பிராடி கார்டியா அரித்மியா என்றும் சொல்கிறோம்.
இதில் டாக்ரிக்கார்டியா என்பது இதயம் மிக வேகமாகத் துடிக்குமபோது ஏற்படும் அரித்மியாவின் ஒரு வடிவமாகும், அதாவது ஒரு சராசரி வயதில் இருப்பவருக்கு, நிமிடத்திற்கு 100 துடிப்புகளுக்கு மேல் இருந்தால் டாக்ரிக்கார்டியா என்று கருதலாம்.
பிராடி கார்டியா என்பது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 60 துடிப்புகளுக்குக் குறைவாக இருக்கும் போது ஏற்படுகிறது. இவை மேலே சொன்ன அந்த நான்கு காரணங்களால் ஏற்படுவதாகும். அதுபோன்று குழந்தைகளுக்கு ஏற்படும் சீரற்ற இதய துடிப்பிற்கு, இதயத்தில் இருக்கும் பிரச்னைகள் காரணமாகலாம். உதாரணமாக, பிறவிலேயே இதயத்தில் ஓட்டையுடன் பிறப்பது அல்லது இதயம் சரியான வளர்ச்சியடையாமல் இருப்பது. இதயத்தில் இருக்கும் சர்க்யூட் சரியான வளர்ச்சியடையாமல் இருப்பது போன்றவையாகும். பொதுவாக, படபடப்பு, மயக்கம் போட்டு விழுதல், தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது இதய சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம்.
சிகிச்சை முறைகள்
பொதுவாக மேலே சொன்னது போன்ற அறிகுறிகளுடன் வரும்போது இசிஜி, எக்கோ கார்டியோகிராம், டிரெட்மில் டெஸ்ட், வோல்டர் டெஸ்ட் என பல பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, பின்னர் அதற்கு ஏற்ற சிகிச்சையை மேற்கொள்ளுவோம். பொதுவாக, இந்த பரிசோதனைகளிலேயே ஓரளவு எந்த கட்டத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். இதைத்தாண்டியும் தீவிரமான நிலையில் இருந்தால் ஆஞ்சியோகிராம் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளுவோம். இவையெல்லாம் தான் இதயம் சார்ந்த பிரச்னைகளாக இருக்கும். இது தவிர பேஸ் மேக்கர், ஐசிடி போன்ற கருவிகள் மூலமும் சிகிச்சைகள் அளிக்கப்படும்.
அப்படி இந்த பரிசோதனைகளில் ஒருவருக்கு இதயத்தில் எந்த பிரச்னையும் இல்லை. இருந்தாலும், அவருக்கு படபடப்பு சீரற்ற இதயத்துடிப்பு இருக்கிறது என்றால், அது மனநலம் சார்ந்த பிரச்னையாக இருக்கும். உதாரணமாக அதிகளவு மனஅழுத்தத்தில் இருப்பது, எப்போதும் கோவமாக இருப்பது அல்லது பயத்துடன் இருப்பது போன்றவற்றினாலும் படபடப்பு சீரற்ற இதயத்துடிப்பு இருக்கும். சில தெரபிகள் மூலம் அவர்கள் மனதை அமைதிப் படுத்தினால் படபடப்பு குறையும்.
இது தவிர, பொதுவாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்ட் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் சிலருக்கு படபடப்பு, சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படும். அடுத்ததாக ரத்தசோகை இருந்தாலும், படபடப்பு சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படும். ஏனென்றால், ரத்தசோகை அதிகமாகும்போது இதயம் சார்ந்த பிரச்னைகளை உருவாக்கலாம்.
நுரையீரலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அல்லது வீசிங், டிபி, காசநோய், ஆஸ்துமா போன்ற நோயினால் பாதித்திருந்தால் அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருத்தல் அதனால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருத்தல் போன்ற காரணங்களாலும் படபடப்பு, சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படும். எனவே, இதயத்தில் தொடர்ந்து படபடப்போ அல்லது சீரற்ற இதயத்துடிப்போ உணர்ந்தால், அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
தொகுப்பு: தவநிதி
The post சீரற்ற இதயத்துடிப்பு சிக்கலாகுமா? appeared first on Dinakaran.