- பெங்களூர்
- பாக்கிஸ்தான்
- Icourt
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- கர்நாடகா உயர் நீதிமன்றம்
- நீதிபதி
- சனந்தா
- பெங்களூரு
- அய்கோர்ட்
- தின மலர்
புதுடெல்லி: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஷானந்தா, வழக்கு விசாரணை ஒன்றின் போது பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று அழைத்திருந்தார். மேலும் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக பெண் வெறுப்பு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இதுதொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை கேட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் போது இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி ஷானந்தா வெளியிட்ட அறிக்கையில், ‘நீதித்துறையின் நடவடிக்கையின் போது கூறப்பட்ட சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் திரித்து செய்தியாக்கப்பட்டிருக்கிறது. அந்த கருத்துகள் எந்த ஒரு தனிநபரையோ அல்லது சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரையோ புண்படுத்தும் நோக்கத்தில் தெரிவிக்கப்பட்டது இல்லை. அவ்வாறு அந்த கருத்து யாரையாவது காயப்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு முன் மேற்கண்ட விவகாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘உயர்நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே அதன் கண்ணியம் கருதி அதனை பரிசீலித்தோம். அவருக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க தேவையில்லை என்று முடிவெடுத்துள்ளோம். நீதிமன்றத்திற்குள் நடக்கும் விசயங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், நீதிமன்றத்திற்கு வெளியே உள்ளே இருக்கும் பார்வையாளர்கள் வரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நீதிபதியாக இருக்கும் ஒருவர், தனது சொந்த கருத்துகளை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அத்தகைய விழிப்புணர்வின் அடிப்படையில் மட்டுமே நாம் கடமையில் விசுவாசமாக இருக்க முடியும். பாலினம் அல்லது சமூகத்திற்கு எதிராக பேசுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று நம்புகிறோம். இருப்பினும் இந்த நாட்டின் ஒரு பகுதியை பாகிஸ்தான் என்று கூறக்கூடாது. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சூரிய ஒளிக்கு பதில் அதிகப்படியான சூரிய ஒளி தான். அதைவிடுத்து கதவுகளை மூட முடியாது. நாட்டின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று அழைக்க முடியாது’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post பெங்களூருவின் ஒரு பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய விவகாரம்; ஐகோர்ட் நீதிபதியின் மன்னிப்பை ஏற்று வழக்கு முடித்து வைப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.