×
Saravana Stores

கடைமடைக்கு கூட இதுவரை போகவில்லை நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் தேவை

*முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும்

*குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ இலக்கியா தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டு கோட்டாட்சிரியிடம் மனு அளித்து பேசினர்.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது,விவசாயி ஜீவக்குமார்: காவிரி வெண்ணாறு ஆகியவற்றின் கிளை வாய்க்கால்களின் கடைமடைக்கு கூட இதுவரை தண்ணீர் போகவில்லை.

நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் தேவை. கல்லணை கால்வாயில் கடந்த 5 நாட்களில் 8 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மாடுகளும் ஆற்றில் போய்விட்டன. இந்தக் கூட்டத்திற்கு பதில் சொல்ல தகுதி உள்ள அதிகாரிகள் வருவதில்லை. அடுத்த கூட்டத்தில் இந்த நிலை நீடித்தால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.

கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ்: குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலை அரவைப்பருவத்தை டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். வெட்டுக்கூலியை அரசே ஏற்க வேண்டும். மழைக்காலங்களில் காட்டுவாரியில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கசிவு நீர் குட்டைகளை உடன் தூர்வார வேண்டும். கரும்புக்கான சிறப்பு ஊக்க தொகையை தீபாவளிக்குள் வழங்க வேண்டும். மரவள்ளி கிழங்கு அதிக அளவு சாகுபடி செய்யப்படுவதால் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. முன்பு வழங்கியது போல் ரூ.20 ஆயிரம் மானியத்தை வழங்க வேண்டும்.

ஏ.கே.ஆர்.ரவிச்சந்திரன்: தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சம்பா பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்திய தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டு இழப்பீட்டை பெற்று தர வேண்டும். 25 சதவீதம் மட்டுமே அரசு வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு விதை நெல் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கச் செய்ய வேண்டும். இல்லாவிடில் அனைத்து விவசாய சங்கங்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்.

வீர ராஜேந்திரன்: கோனேரிராஜபுரம் கிராம விவசாய நிலங்களுக்கு கடந்த பல வருடங்களாக ஆற்று நீர் பாசன வசதி இல்லை. கடந்த 2023 ம் ஆண்டு கோனேரிராஜபுரம் தலை மதகு பகுதியில் 10.60 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைத்தனர். இருப்பினும் கோனேரிராஜபுரம் தலை மதகு பாசன வசதி முற்றிலும் இல்லை. தடுப்பணையின் உயரத்தை விட மதகின் தரை மட்டம் அதிகமாக உள்ளது. எனவே நீர் பெற முடியவில்லை. இதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனியப்பன் : நவம்பர் மாதம் விவசாயிகள் கடலை சாகுபடி மேற்கொள்வார்கள். இதற்கான விதை கடலையை அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும்.
அதிகாரிகள் ஆய்வு செய்து விடுபட்ட விவசாயிகளை பயிர் காப்பீடு செய்வதில் சேர்க்க வேண்டும்.தங்கவேல்: தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் முறை வைக்காமல் இம்மாதம் முழுவதும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். அனைத்து வாய்க்கால்களுக்கும் கரை காவலர் நியமனம் செய்து தண்ணீர் எங்கு அதிகம் உள்ளது, எங்கு பற்றாக்குறையாக உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தது போல் தண்ணீர் விட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

The post கடைமடைக்கு கூட இதுவரை போகவில்லை நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் தேவை appeared first on Dinakaran.

Tags : Kuradir ,Thanjavur ,RTO Littara ,Dinakaran ,
× RELATED தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அதிமுக...