*குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு
நெல்லை : தசரா விழாவுக்கு முன்பாக நெல்லை டவுனில் சாலைகளை செப்பனிடக்கோரி பொதுமக்கள் நேற்று மேயரிடம் மனு அளித்தனர்.நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கேஆர் ராஜூ முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர்கள் ஜான்சன் தேவசகாயம், சுகி பிரேமலா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பேரின்பம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நெல்லை டவுன் சாலியர் தெரு மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சாலியர் தெருவில் வருகிற அக்டோபர் 12ம் தேதி தசரா திருவிழாவுக்கான 50 சப்பரங்களில் அம்பாள்கள் வீதியுலா வந்து மாரியம்மன் திருக்கோயிலை தரிசனம் செய்து விட்டு பின்னர் பரிவேட்டைக்கு செல்லும்.
தற்போது சாலியர் தெருவில் குழாய் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. இதனால் தசரா திருவிழாவின் போது பக்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே இந்த குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து தார் சாலை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.’’ என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி 27வது வார்டு கவுன்சிலர் உலகநாதன் அளித்த மனுவில், ‘‘தசரா திருவிழாவை முன்னிட்டு சக்தி தரிசன சப்பரங்கள் டவுன் பகுதியிலுள்ள அனைத்து அம்மன் கோயில்களிலிருந்தும், நெல்லையப்பர் கோயில் முன்பு அணிவகுத்து நிற்கும். இந்த சப்பரங்கள் பரி வேட்டைக்காக சாலியர் தெரு மாரியம்மன் கோயிலுக்கு செல்வது வழக்கம். எனவே அந்த சாலையை சீரமைத்துத் தருவதோடு, 4 ரதவீதிகளிலும் சுகாதார வசதிகள் மற்றும் மொபைல் டாய்லெட் வசதிகளை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11வது வார்டு கவுன்சிலர் கந்தன் தலைமையில் வார்டு மக்கள் அளித்த மனுவில், ‘‘வண்ணார்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் படிப்புக்கு போதிய இடவசதி இல்லாததால், மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் போட்டு ரூ.97 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடந்தன. தற்போது கீழ்தளம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேல்தளம் கட்டப்படவில்லை. தற்சமயம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அங்கன்வாடி, தலைமை ஆசிரியர் அறை மற்றும் 8 வகுப்புகளுக்கு போதிய இட வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றன. போதிய கல்வி நிதி ஒதுக்கி, பணிகளை விரைந்து முடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.’’ என்றனர்.
பெருமாள்புரம் ஜெபா கார்டன் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு மக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் குடியிருப்பில் சுமார் 320 வீடுகள் உள்ளன. குடிநீர், மின்
விளக்கு போன்ற அடிப்படை பிரச்னைகளை எங்கள் வார்டில் சரி செய்து தர வேண்டும். மாநகராட்சி லாரி மூலமே 2 தினங்களுக்கு முன்பு தண்ணீர் விடப்பட்டது. அந்த தண்ணீர் போதாததால் போதிய குடிநீர் வசதி செய்து தர கேட்டுக்கொள்கிறோம்.’’ என்றனர்.
நெல்லை 12வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் அளித்த மனுவில், ‘‘உடையார்பட்டி ரெங்கநாதன் பள்ளி முன்பு மழை காலத்திற்கு முன் பேவர்பிளாக் சாலை அமைத்துத்தர வேண்டும். செல்விநகர் பூங்காவில் இருந்து குடியிருப்புகளில் படரும் மரக்கிளைகளை அகற்றி தர வேண்டும்’’ என்றார்.
ஆட்சித்தமிழ் புரட்சி கொற்றம் ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தலைவர் கண்மணி மாவீரன், செயலாளர் சேரன்துரை ஆகியோர் மேயரிடம் அளித்த மனுவில், ‘‘நெல்லை மாநகராட்சி அலுவலக கட்டிடங்களில் தமிழ் ஆட்சி மொழி சட்டங்களில் அரசாணைகளின்படி தமிழ்ப்பெயர்களை பதிவு செய்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேசமயம் பேட்டையில் உள்ள லாரி முனையத்திற்கு ‘நெல்லை மாநகராட்சி கனரக சரக்கு சுமை வாகன முனையம்’ என பெயர் மாற்றி எழுதவும், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் ‘ஐ லவ் நெல்லை’ என்பதை ‘நேசிக்கிறேன் நெல்லை’ என மாற்றி எழுதவும் கேட்டுக் கொள்கிறோம்.’’ என்றனர். தொடர்ந்து பாஜ செயற்குழு உறுப்பினர் சுவாமி சுப்பிரமணியன், 33வது வார்டில் கோபாலசாமி கோயில் உள்ளிட்ட ஆலயங்கள் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரி மனு அளித்தார்.
The post வண்ணார்பேட்டையில் இடவசதி இல்லாமல் மாணவர்கள் திண்டாட்டம் தசரா விழாவுக்கு முன்பாக டவுனில் சாலைகளை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.