* நீர்வளத்துறை அலட்சியத்தால் மழைநீர் புகும் அபாயம்
* நகரின் மைய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம்
புளியங்குடி : புளியங்குடியில் நகராட்சி தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து வருவதால் சிதம்பரபேரி ஓடையை தூர்வாருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் புளியங்குடி நகரின் மையப்பகுதியில் மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புளியங்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரபேரி ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடைக்கு மேற்கு பகுதியில் இருந்துவரும் மழை நீர் சிதம்பரபேரி ஓடை வழியாக நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று சமுத்திரம் குளத்தை அடைகிறது. புளியங்குடி மேற்கு பகுதி வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர், மழை நீர் அனைத்தும் இந்த ஓடை வழியாக தான் செல்கிறது. இதனால் மழை காலங்களில் ஓடை நிரம்பி செல்லும் போது மரங்கள், செடிகள் மற்றும் குப்பைகளால் நிரம்பி காணப்படுகிறது.
மேலும் அருகிலுள்ள குடியிருப்புவாசிகளால் அவர்கள் வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை ஓடையில் வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஓடையில் கழிவு நீர் தேங்கி கிடப்பதோடு துர்நாற்றமும் வீசுகிறது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் குடியிருப்பு பகுதிகளில் சாதாரணமாக நுழைந்து விடுகிறது.மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில் ஓடையில் வெள்ளம் வரும் போது தூர்வாரப்படாததால் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஓடையை ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வார ஒப்புதல் அளித்து நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த ஓடையானது நீர்வளத்துறை கட்டுபாட்டில் இருப்பதால் ஓடையை தூர்வாருவதற்கு அவர்கள் அனுமதி தர மறுக்கின்றனர். ஓடை நகரின் மைய பகுதியில் செல்வதால் 5 வார்டு பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக சிதம்பரபேரி ஓடையை தூர்வார வேண்டும். இல்லையெனில் மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தூர்வாரும் பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்க அறிவுறுத்த வேண்டும். அப்போது தான் மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்’ என்றனர்.
The post புளியங்குடியில் நகராட்சி தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி மறுப்பு சிதம்பரபேரி ஓடையை தூர்வாருவதில் சிக்கல் appeared first on Dinakaran.