- அரசு மருத்துவக் கல்லூரி
- திருவண்ணாமலை மாவட்டம்
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன்
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை
- தமிழ்நாடு பசுமை இயக்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பல்லுயிர் பெருக்கம்
*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை வனக்கோட்டத்தில், நடப்பு ஆண்டில் தமிழ்நாடு பசுமை இயக்கம், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், ராஷட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஆகியவற்றின் சார்பில், மாவட்டம் முழுவதும் 9,26,659 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதையொட்டி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், வனத்துறை சார்பாக தமிழ்நாட்டின் வனபரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் தமிழ்நாடு பசுமை இயக்கம் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. எம்பி சி.என்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட வன அலுவலர் யோகோஷ்குமார் கார்க் வரவேற்றார்.
விழாவில், நெல்லி, நாவல், வேம்பு, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:
தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்களில் இருந்துதான், மனித வாழ்க்கை முறை தொடங்கியது.
நிலவகைகளுக்கு ஏற்ற மரங்கள் நடும் வழக்கத்தை தமிழர்கள் கடைபிடித்தனர். எனவே, அந்தந்த பகுதிகளில் விளையும் மற்றும் அந்தந்த பருவங்களில் விளையும், காய் மற்றும் கனிகளை உண்பது ஆரோக்கியதுக்கு ஏற்றது.வன வளத்தை பாதுகாப்பது நமது கடமை. வனவளம் குறைந்தால் மழை வளம் குறையும். மரங்களை அழிக்கும் போது, அதற்கு ஈடாக கூடுதலாக மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். மனிதர்களைவிட, பறவைகளும், விலங்குகளும் மரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவியாக இருக்கிறது. இயற்கையை பாதுகாக்க மரங்களை வளர்ப்பதுதான் சிறந்த வழி.
பறவைகளின் எச்சத்தின் வழியாக, மிகப்பெரிய அரச மரங்களும், ஆலமரங்களும் உருவாகின்றன. டோடா என்ற பறவை இனம் அழிந்த பிறகு, அந்த பறவையின் எச்சத்தின் மூலம் வளரும் ஒருசில வகை மரங்கள் வளரவில்லை. இயற்கையோடு இணைந்த வாழ்வுதான் சிறந்தது.நமது பிறந்த நாள் மற்றும் விழாக்களின் அடையாளமாக, மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும். குறிப்பாக, பழமரக்கன்றுகளை நம்முடைய வீடுகளில் நட வேண்டும். இயற்கையை பாதுகாக்க ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும்,இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவவனை கண்காணிப்பாளர் மாலதி, உதவி வன பாதுகாவலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 9.26 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி appeared first on Dinakaran.