×
Saravana Stores

மதச்சார்பின்மை குறித்து சர்ச்சை கருத்து: தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய I.N.D.I.A. கூட்டணி வலியுறுத்தல்!!

டெல்லி: மதச்சார்பின்மை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய தத்துவம் என்றும் அது இந்தியாவுக்கு தேவையில்லை என்றும் கருத்து தெரிவித்தார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சர் பா.சிதம்பரம் திருவள்ளுவருக்கு காவி அங்கியை அணிவித்த ஆளுநர் மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய கொள்கை என்றும் அதற்கு இந்தியாவில் இடமில்லை என்றும் இப்போது கண்டு பிடித்துள்ளார் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

கூட்டாட்சி முறை என்பதும் ஐரோப்பிய கொள்கையாகவே இருந்தது என்றும் அப்படி என்றால் கூட்டாட்சி முறைக்கு இந்தியாவில் இடமில்லை என்று அறிவித்து விடலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மதச்சார்பின்மை குறித்து ஆளுநர் ரவிக்கு என்ன தெரியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவும் வினவி உள்ளார். தமிழ்நாடு போன்ற முக்கியமான மாநிலத்திற்கு ரவியை ஆளுநராக நியமித்தது வெட்கக்கேடான ஒன்று என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி செயல்படும் ஆளுநர் பிரதமரின் கருத்தை எதிரொலிகிறார் என்றும் அவரது கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது போன்றதொரு எதிர்ப்பை பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆளுநர் பதவி கூட பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டு இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், மோடி அரசு அதனை தவறாக பயன்படுத்தி வருவதாக தமிழக ஆளுநரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய ஆளுநர் பதவி இந்தியாவுக்கு இனி தேவையில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறியுள்ளார். மதச்சார்பின்மை தொடர்பான தமிழக ஆளுநரின் கருத்து உச்சநீதிமன்ற மற்றும் இந்திய அரசியல் அமைப்பை கேலிக்குள்ளாக்கி இருப்பதாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

The post மதச்சார்பின்மை குறித்து சர்ச்சை கருத்து: தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய I.N.D.I.A. கூட்டணி வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : I.N.D.I.A. Alliance ,Delhi ,Tamil Nadu ,Governor R. N. RAVI ,INDIA ALLIANCE ,Governor ,R. N. Ravi ,India ,I.N.D.I.A. ,Tamil Nadu Governor Ravi Alliance ,
× RELATED குட்கா முறைகேடு வழக்கில் ஆவணங்களை...