வந்தவாசி, செப்.25: வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட பைக் மெக்கானிக் திடீரென இறந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு நகரை சேர்ந்தவர் ஷபியுல்லா(24), பைக் மெக்கானிக். இவரது மனைவி வந்தவாசி அடுத்த அமையப்பட்டு பக்கீர்தர்கா பகுதியை சேர்ந்த ரபி மகள் ஜம்ஷாத்(23). தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், ஷபியுல்லா மனைவி ஜம்ஷாத் தாய் வீடான வந்தவாசிக்கு வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக நேற்று ஷபியுல்லாவும் வந்தவாசிக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு மதியம் ஒரு மணி அளவில் திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் உறவினர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது, அங்கிருந்த செவிலியர்கள் அவருக்கு பிளட் பிரஷர் அதிகமாக உள்ளது, உரிய சிகிச்சை அளித்தால் சரியாகிவிடும் என கூறினார்களாம். மதியம் 3 மணி வரை அவரை மருத்துவர்கள் பார்க்காத நிலையில் ஷபியுல்லாவை உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், மருத்துவமனை வளாகத்தை விட்டு ஆம்புலன்ஸ் வெளியே வந்த நிலையில் ஷபியுல்லா உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் திடீரென அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி கங்காதரன் மற்றும் போலீசார் போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் சமரசத்தை ஏற்காமல், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து மருத்துவ அலுவலர் சிவப்பிரியா லோகேஸ்வரனுடன் மருத்துவமனை வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணியில் இருந்த செவிலியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக புகார் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டால்தான் உடலை வாங்குவோம் எனக்கூறி தொடர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். பின்னர் கலைந்து சென்றனர். இந்த மறியலால் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post அரசு மருத்துவமனையில் பைக் மெக்கானிக் திடீர் சாவு * உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார் * உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு வந்தவாசியில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார் appeared first on Dinakaran.