×

தமிழகத்தில் தொடர் தோல்வியால் கட்சி மேலிடம் அதிருப்தி அண்ணாமலைக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஆலோசனை: பாஜ வட்டாரத்தில் திடீர் பரபரப்பு

சென்னை: அண்ணாமலைக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது தமிழக பாஜ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனையின்போது, அண்ணாமலை இல்லாமல் கட்சியை வளர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜ மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். இவர், தலைமை பொறுப்பு ஏற்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டார்.

ஆனால், பாஜ படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று அதிமுக கட்சியில் பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து அதிமுக – பாஜ இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அதிமுக மறைந்த தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜ கூட்டணியை முறித்துக் கொண்டார். பின்னர் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜ தனித்தனியே போட்டியிட்டது. இந்த தேர்தலில் 40 இடங்களிலும் இரண்டு கட்சிகளும் மண்ணை கவ்வியது.

தொடர்ந்து தமிழக தேர்தல்களில் பாஜ தோல்வி அடைந்தாலும், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில அனைத்துக்கட்சிகளையும், தலைவர்களையும் விமர்சித்து வந்தார். இதனால் பாஜ நிர்வாகிகள் இடையே அண்ணாமலைக்கு கெட்ட பெயர் உருவானது. இந்த நிலையில், அண்ணாமலை திடீரென அரசியல் தொடர்பான படிப்புக்காக கடந்த ஆகஸ்டு 29ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். 3 மாத படிப்பை முடித்துவிட்டு நவம்பர் இறுதியில் தமிழகம் திரும்புகிறார்.

அண்ணாமலை வெளிநாடு சென்றதால், தமிழக பாஜவுக்கு இடைக்கால தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தமிழக பாஜவை வழிநடத்த 6 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் கடந்த ஆகஸ்டு மாதம் 30ம் தேதி நியமித்தது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த 6 பேரும் அண்ணாமலைக்கு எதிராகவே செயல்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ளதை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பாஜ கட்சியை வளர்க்க டெல்லி தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில வாரங்களாக அடிக்கடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக இரு நாட்களுக்கு முன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வங்கி கெஸ்ட் ஹவுசில் தமிழக பாஜவின் 2ம் கட்ட தலைவர்களை அழைத்து பேசினார். இந்த கூட்டத்திற்கு, அண்ணாமலையின் ஆதரவாளரான கரு நாகராஜன் உள்ளிட்ட தலைவர்களையும், அதேபோன்று முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்களையும் அழைக்கவில்லை.

இந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமனின் தீவிர ஆதரவாளரான வானதி சீனிவாசன், மாநில செயலாளர் சூர்யா, கறுப்பு முருகானந்தம், பால்கனகராஜ், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 முக்கிய நிர்வாகிகளை தனியாக அழைத்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்ணாமலை நடவடிக்கையால் தமிழக பாஜகவில் எந்த வளர்ச்சியும் இல்லை. 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜ காலூன்ற எந்த மாதிரியான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும், கட்சி தலைமை இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் மூலம் தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கி விட்டு, நிர்மலா சீதாராமனின் ஆதரவாளர் ஒருவர் தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை தமிழகத்தில் இல்லாத நிலையில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி தமிழகம் வருவது, நிர்வாகிகளை அழைத்து பேசுவது பாஜ கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கி விட்டு, நிர்மலா சீதாராமனின் ஆதரவாளர் ஒருவர் தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது

The post தமிழகத்தில் தொடர் தோல்வியால் கட்சி மேலிடம் அதிருப்தி அண்ணாமலைக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஆலோசனை: பாஜ வட்டாரத்தில் திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nirmala Sitharaman ,Annamalai ,Tamil Nadu ,BJP ,Chennai ,Dinakaran ,
× RELATED மத்திய அமைச்சர் பதவி கிடைக்க, அண்ணாமலை...