தேவகோட்டை: அதிக வட்டி கொடுப்பதாக ஆசைகாட்டி, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 2 வீடுகள், 4 கடைகளுக்கு சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அழகாபுரி மேற்குத் தெருவில் வசிப்பவர் விஜயராகவன். நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தினார். அதிக வட்டி தருவதாக கூறியதால், மக்களிடம் இருந்து அதிகளவு பணம் வசூலானது.
இந்நிறுவனத்திற்கு சேர்மனாக விஜயராகவனும், நிர்வாக இயக்குநராக தேவகோட்டை, வள்ளலார் நகரைச் சேர்ந்த அருண்குமாரும் செயல்பட்டனர். அருண்குமாரின் தந்தை முனியாண்டி. ஓய்வு எஸ்ஐயாக உள்ளார். இருவரும் ஏராளமான முகவர்களைக் கொண்டு 2,500க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்றனர். ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறியதால், ரூ.250 கோடிக்கும் மேல் முதலீடுகள் குவிந்தன.
2021ம் வருடம் நிறுவனத்தை ஆரம்பித்து மூன்று வருடங்களுக்குள் கோடிக்கணக்கான பணம் சேர்ந்தது. ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்களுக்கு வட்டி கொடுக்க முடியாமல் தலைமறைவாகி விட்டனர். ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன் மதுரை போலீசார், விஜயராகவன், அருண்குமார் இருவரையும் கைது செய்தனர்.
தற்போது இருவரும் மதுரை மத்திய சிறையில் உள்ளனர். சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சிறப்புப்படையினர் நேற்று தேவகோட்டை வந்து, விஜயராகவன், அருண்குமார் வீடுகள், நான்கு அலுவலகங்கள் என மொத்தம் ஆறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றினர். மேலும் 2 வீடுகள், 4 அலுவலகங்களுக்கும் சீல் வைத்து சென்றனர்.
The post நிதி நிறுவனம் ரூ.250 கோடி மோசடி சேர்மன், நிர்வாக இயக்குநர் கைது: 2 வீடுகள், 4 ஆபீஸ்களுக்கு சீல் appeared first on Dinakaran.