×

தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் ஆணையிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் மாநகராட்சியானது தாம்பரம், பல்லவபுரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் ஆகிய ஐந்து நகராட்சிகளையும் மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை, பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்கரணை ஆகிய பேரூராட்சி பகுதிகளையும் உள்ளடக்கி பெரிய மாநகராட்சியாக 2021ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இம்மாநகராட்சியின் தற்போதைய பரப்பளவு 87.64 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 7,23,017 மற்றும் தற்போதைய மக்கள் தொகை 10,39,842 ஆகும். மேலும், தாம்பரம் மாநகராட்சியுடன் இம்மாநகரையொட்டி அமைந்துள்ள ஊராட்சிகளையும் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை மூலம் புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு ரூ10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் போதிய இடவசதி இல்லாத நிலையில் இயங்கி வருவதால் போதிய வசதிகளுடன் புதியதாக மாநகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட வேண்டியது அவசியமாக உள்ளது.

மேலும், தாம்பரம் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை, சிட்லப்பாக்கம் கிராமம், சர்வே 1.90.02 எக்டேர் (4.69 ஏக்கர்) ‘அரசு புறம்போக்கு’ வகைப்பாடு இடத்தினை மாநகராட்சி பெயருக்கு உரிமை மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணிக்காக ரூ43.40 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் ஆணையிட்டுள்ளார். இப்புதிய அலுவலக கட்டடம் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களை கொண்டிருக்கும்.

மொத்தம் 12,441 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இக்கட்டடத்தில் அலுவலகப் பகுதி, உயர் அலுவலர்களுக்கான அறைகள், மன்றக்கூடம், கணினி மையம், பொதுமக்களுக்கான காத்திருப்பு அறை, கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்தூக்கிகள், சாய்வுதளங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் பொதுமக்கள், அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் அமையவுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் காந்தி சாலையில் அமைய உள்ள புதிய காவல் ஆணையரக அலுவலக பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிலம் தேடி வந்தனர். இந்நிலையில் தாம்பரம், காந்தி சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 100 கோடி மதிப்புள்ள 2.5 ஏக்கர் நிலம் தனியார் ஒருவர் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தை கையகப்படுத்தி அதில் உள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு, நிலத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையராக கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு, அங்கிருந்த கட்டிடங்களை போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.

இந்நிலையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகம் அமைய உள்ள நிலத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் நேற்று ஆய்வு செய்தார். மேலும் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது தாம்பரம் மாநகர காவல் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன் குமார், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன், ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் உட்பட ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

The post தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tamil Nadu Government ,CHENNAI ,Chief Minister ,Tambaram Municipal Corporation ,Tambaram ,Pallavapuram ,Pammal ,Anagaputhur ,Sembakkam ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் ரூ.48 கோடியில் திட்ட பணிகள்: ஆணையர் நேரில் ஆய்வு