×

சென்னை, நாகர்கோவில் உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை: தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் தேடுதல் வேட்டை

சென்னை: தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப் உத் தாஹரீர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்ந்ததாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையில் டாக்டர் ஹமீது உசேன் என்பவர் தனது யூடியூப் மூலம் தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப் உத் தாஹரீர்’ அமைப்புக்கு ஆதரவாக இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்கள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராயப்பேட்டை ஜானி கான் தெருவில் உள்ள ஹமீது உசேன் சொற்பொழிவு நடத்தும் இடம் மற்றும் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போது, அவர் ‘ஹிஸ்ப் உத் தாஹரீர்’ தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருந்து வந்ததும், அந்த அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தனது யூடியூப் மூலம் சொற்பொழிவு என்ற பெயரில் ஆட்கள் சேர்ந்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் பேராசிரியரான டாக்டர் ஹமீது உசேன் அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உபா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து சென்னையை சேர்ந்த முகமது மவுரிஸ்(36), காதர் நவாஸ் ஷெரிப்(35), முகமது அலி உமரி(46) அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி என்ஐஏ அதிகாரிகள் இந்தியாவில் தடை செய்ப்பட்ட அமைப்பான ‘ஹிஸ்ப் உத் தாஹரீர்’ ஆட்கள் மற்றும் நிதி உதவி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு அளித்த ஆவணங்களை வைத்து விசாரணையை தொடங்கியது. அதேநேரம், தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப் உத் தாஹரீர்’ அமைப்புக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சிலர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து ஆட்களை திரட்டியதும் மற்றும் வனப்பகுதிகளில் பயிற்சி அளித்ததும் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சென்னை, நாகர்கோவில், புதுக்கோட்டை உட்பட தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை எழுகிணறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ரகுமான் என்பவர் வீட்டில் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றினர். அதேபோல் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஜாம்பஜார், நீலாங்கரை, வண்டலூர், சிட்லப்பாக்கம், பெரும்பாக்கம், ஊரப்பாக்கம், நன்மங்கலம் உள்ளிட்ட சென்னையில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.

இதுதவிர நாகர்கோவில் அருகே இளங்கடை என்ற பகுதியில் முகமது அலி என்பவருக்கு சொந்தமான வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது முகமது அலி வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு சில ஆவணங்களை எடுத்து சென்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல் கான் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேநேரம், ஏற்கனவே கைது செய்யப்பட்ட முன்னாள் அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஹமீது உசேன் உடன் அப்துல் கான், முகமது அலி, ரகுமான் உள்ளிட்டோர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவருடன் தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப் உத் தாஹரீர்’ அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதற்கான ஆவணங்கள், வெளிநாட்டு தொடர்புகள் குறித்து ஆவணங்கள் சிக்கியதாக என்ஐஏ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை முடிவில் அனைவருக்கும் நேரில் ஆஜராக வேண்டும் என்று என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் சம்மன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post சென்னை, நாகர்கோவில் உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை: தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.

Tags : NIA ,Chennai ,Nagercoil ,Manhunt ,Tamil Nadu ,Hizb-ud-Taharir ,Dr. ,Hameedu Hussain ,Rayapetta, Chennai ,YouTube ,Nagercoil, Chennai ,Dinakaran ,
× RELATED தேர்தலை சீர்குலைத்த நக்சல்...