×

தாமதமாக வந்ததால் ஆதங்கம் பேருந்தில் ஏறாமல் பயணிகள் போராட்டம்: ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்துகள் தாமதமாக வந்ததால், பயணிகள் பேருந்தில் ஏறாமல் முரண்டு பிடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. ஊத்துக்கோட்டை மற்றும் அதைசுற்றியுள்ள அனந்தேரி, போந்தவாக்கம், அழகிரிபேட்டை என 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சென்னை, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். இவர்களின் வசதிக்காக செங்குன்றத்தில் இருந்து 6 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த, பேருந்துகள் ஒரு நாளைக்கு 8 முறை செங்குன்றத்தில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு இயக்கப்படுகிறது.

இப்பேருந்தானது, ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி, தண்டலம் ஆகிய பகுதிகளில் இருந்து செங்குன்றம் சென்று, அங்கிருந்து அரசு மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்வார்கள். இதில், பெரும்பாலான பயணிகள் மாநகர பேருந்தில் பயணிப்பதற்காக 1000 ரூபாய் பாஸ் வாங்கி உள்ளார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக செங்குன்றத்தில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு காலை 6.45 மணி முதல் 7 மணிக்குள் வரவேண்டிய பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராமல் தாமதமாக வருகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்தில் ஏறாமல் முரண்டு பிடித்தபடி சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள், செங்குன்றத்தில் உள்ள மாநகர பேருந்தின் கிளை மேலாளருக்கு போனில் தொடர்புகொண்டு, மாநகர பேருந்துகள் கடந்த சில நாட்களாக தாமதமாக வருகிறது என புகார் அளித்தனர். இதனைகேட்ட அதிகாரி, இனிமேல் சரியான நேரத்திற்கு பேருந்துகள் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள், போராட்டதை கைவிட்டு பேருந்து நிலையத்திற்கு தாமதமாக வந்த பேருந்திலேயே ஏறிச்சென்றனர்.

The post தாமதமாக வந்ததால் ஆதங்கம் பேருந்தில் ஏறாமல் பயணிகள் போராட்டம்: ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED சேறும், சகதியுமான செங்குன்றம் ஜிஎன்டி சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை