×
Saravana Stores

காஞ்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோயில்களின் நகரம் என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றி பார்க்கவும், பட்டுச்சேலை வாங்கவும் வெளி மாவட்டம், மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். மேலும், சென்னை மற்றும் புறநகரை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், படப்பை, சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஏராளமானோர் காஞ்சிபுரத்தில் தங்கியுள்ளனர்.

பிரதான சாலைகளான மேற்கு ராஜவீதி, கிழக்கு ராஜவீதி, செங்கழுநீரோடை வீதி, அன்னை இந்திரா காந்தி சாலை, காமராஜர் சாலை, ரயில்வே ரோடு. காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெரு, காந்தி ரோடு, செவிலிமேடு, கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, வரதராஜ பெருமாள் கோயில் தெற்கு மாடவீதி, ஏகாம்பரநாதர் கோயில் மாடவீதிகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் விழாக் காலங்கள், முகூர்த்த நாட்களில் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி திணறுகின்றனர்.
கோயில் நகரமாக உள்ள காஞ்சிபுரத்தை மேம்பாடு செய்யும் நோக்குடன் நகர்ப்புற வளர்ச்சி திட்டம், புராதன நகர மேம்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சுற்றுலாத்துறை, உள்ளாட்சி துறை சார்பில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ள இடங்களில் நடைபாதை வசதிகள் செய்து தரப்படுகின்றன. ஆனால் அந்த நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் போக்கு தொடர்வதால் பாதசாரிகள் அவதிப்படுகிறார்கள்.இதுகுறித்து, தமிழ் மக்கள் பண்பாட்டு கழக அமைப்பாளர் கோ.ரா.ரவியிடம் கேட்டபோது; காஞ்சிபுரத்தில் தேரோடும் சாலைகளில் மேம்பாலம் அமைக்க முடியாது என்ற காரணத்தால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் நடைபாதைகள் இருந்தாலும், பயனற்றதாகவே உள்ளன. மேலும், மாநகராட்சி அந்தஸ்து பெற்ற காஞ்சிபுரம் பரந்து விரிந்துள்ளது.

ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணிக்க போதிய பொது போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுமக்கள் தனிப்பட்ட வாகனமாக டூ வீலர் மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். இதனால் காந்தி சாலை, காமராஜர் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளது. எனவே, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காஞ்சிபுரத்திற்கு சுற்றுவட்ட போருந்துகளை இயக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க மாவட்ட செயலாளர் பெர்ரி, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், ‘போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓரிக்கையில் இருந்து ஒலிமுகமதுபேட்டை, செவிலிமேட்டில் இருந்து புதிய ரயில் நிலையம், நத்தப்பேட்டையில் இருந்து பிள்ளையார்பாளையம் வழித்தடங்களில் அரசு நகர பேருந்து சேவை தொடங்க வேண்டும்.

மேலும், கங்கைகொண்டான் மண்டபத்தில் இருந்து ஐயன்பேட்டை, டோல்கேட்டில் இருந்து சிறுகாவேரிப்பாக்கம், முத்தியால்பேட்டையில் இருந்து பழைய ரயில் நிலையம், பெரியார் நகரில் இருந்து காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் வழித்தடங்களில் நகர பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு எளிதில் சென்றுவர முடியும். எனவே, பொதுநலன் கருதி காஞ்சி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு நகர பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனிப்பட்ட வாகனங்களின் சேவையை விட பொதுப்போக்குவரத்தில் செலவுகள் குறைவு, இதன் மூலம் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம். பொதுப்போக்குவரத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதுடன், அதிக வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் கார்பன் – டை- ஆக்சைடு உமிழ்வைக் குறைக்கிறது. இதன்மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. எனவே, காஞ்சிபுரம் மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் தொலைநோக்கு திட்டமாக அதிகளவில் அரசு நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தை மேம்பாடு செய்யும் நோக்குடன் நகர்ப்புற வளர்ச்சி திட்டம், புராதன நகர மேம்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சுற்றுலாத்துறை, உள்ளாட்சி துறை சார்பில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

The post காஞ்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Kanchipuram ,
× RELATED காஞ்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில்...