×
Saravana Stores

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 107 சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், நவ.16: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 107க்கு மேற்பட்ட சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர். காஞ்சிபுரத்தில், ஏராளமான கோயில்கள் உள்ளதால் கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள, சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் விமர்சையாக நடந்தது. இதில், பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், வழக்கறுத்தீஸ்வரர் கோயில், புண்ணியகோட்டிஸ்வரர் கோயில், காமராஜர் வீதியில் உள்ள சித்திஸ்வரர், முத்தீஸ்வரர், தவளேஸ்வரர், உத்திரக்கோடீஸ்வரர், மணிகண்டீஸ்வரர், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர், நகரீஸ்வரர், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள ருத்ர கோடீஸ்வரர், காஞ்சிபுரம் அருகே உள்ள கிளார் கிராமத்தில் உள்ள அறம்வளர் நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோயில் கூழமந்தல் கிராமத்தில் உள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில்கள் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 107க்கு மேற்பட்ட சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, சிவன் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவானது ஆண்டுக்கு ஒரு முறை வரும் அன்னாபிஷேகத்தின் வெள்ளை சாதத்தால் லிங்க வடிவில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெறும். இதன்மூலம், ஆயிரக்கணக்கான சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வதை தரிசித்தால் எல்லா பிணிகளும் விலகும், பலன் கிட்டும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், வாலாஜாபாத், பெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் அண்ணா அபிஷேகம் நடைபெற்றது. இந்த, அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில், அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானை தரிசித்தனர். அப்போது அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தையொட்டி அன்னாபிஷேக பெருவிழா நடந்தது. இதற்கு முன்னதாக கோயில் வளாகத்தில் காய்கறி பழங்களால் பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, 200 கிலோ அரிசி அன்னத்தால் ஆட்சீஸ்வரர் சுவாமிக்கு மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் 107 சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Annabhishekam ,Shiva temples ,Kanchipuram district ,Kanchipuram ,Lord Shiva ,Temple City ,Annabishekam ,
× RELATED தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்