×
Saravana Stores

அடுத்த மாதம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; நெல்லை – கொல்லம் பகல் நேர நேரடி ரயில்களை தொடங்கி வைப்பாரா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை தொடங்கி வைக்க அடுத்த மாதம் வருகை தரும் பிரதமர் மோடி நெல்லை – தென்காசி – கொல்லம் ரயில் வழித்தடத்தில் பகல் நேர நேரடி பயணிகள் ரயில்களையும் தொடங்கி வைக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நூற்றாண்டு பெருமை கொண்ட 1904ம் ஆண்டு கொல்லத்தில் இருந்து தென்காசி, நெல்லை வழியாக ரயில் போக்குவரத்து முதன் முறையாக மீட்டர் கேஜ் பாதையில் தொடங்கியது. அகல ரயில் பாதை பணிகளுக்காக கொல்லம் – புனலூர், புனலூர் – செங்கோட்டை, செங்கோட்டை – நெல்லை, நெல்லை – திருச்செந்தூர் என பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற்றது. மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் நிறைவு பெறாததால் நேரடி ரயில்கள் இயக்கம் தடைபட்டது.

மீட்டர்கேஜ் காலக்கட்டத்தில் நெல்லையிலிருந்து காலை 7 மணி மற்றும் 9 மணி மற்றும் மதியம் ஒரு மணிக்கு புறப்படும் ரயில்கள் தென்காசி வழியாக கொல்லம் வரை இயக்கப்பட்டன.
நேரடி ரயில்கள் வர்த்தக ரீதியாக தமிழ்நாடு மற்றும் கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. எனவே மீட்டர் கேஜ் காலத்தில் ரயில்கள் கொல்லம் வரை இயங்கியதை போல தற்போதும் நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கையாக உள்ளது. எனவே காலை 7, 9.45 மணி மற்றும் மதியம் 1.50 மணிக்கு நெல்லையில் புறப்படும் நெல்லை – செங்கோட்டை ரயில்களை கொல்லம் வரை நீட்டிக்க வேண்டும். மறு மார்க்கத்தில் காலை 6:20 மாலை 3 மணிக்கு ஒரு சேவையும், மாலை 5:20க்கு கொல்லத்தில் புறப்படும் கொல்லம் – புனலூர் ரயிலை தென்காசி வழியாக நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: செங்கோட்டை – கொல்லம் இடையே மீட்டர் கேஜ் காலத்தில் 8 ஜோடி ரயில்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது வெறும் 3 ஜோடி ரயில்களே இயங்கி வருகின்றன. அதாவது தென்காசி வழியாக நெல்லை – கொல்லம் மூன்று ஜோடி பயணிகள் ரயில்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரு ரயில் கூட இயக்கப்படாமல் உள்ளது. நெல்லை – கொல்லம் இடையே காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு இயக்கப்பட்டால் தமிழ்நாடு கேரளா இடையே வணிக போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும். மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள், கேரளாவிற்கு மருத்துவத்திற்கு செல்வோர் என அனைத்து தரப்பினருக்கும் பயன் பெறுவர். அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில் மேற்கண்ட நெல்லை – கொல்லம் நேரடி ரயில்களை கொடி அசைத்து தொடங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என அவர் தெரிவித்துள்ளார்.

The post அடுத்த மாதம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; நெல்லை – கொல்லம் பகல் நேர நேரடி ரயில்களை தொடங்கி வைப்பாரா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Rameswaram ,Nellai ,Kollam ,Modi ,Pampan Bridge ,Nellai - Tenkasi - Kollam ,Dinakaran ,
× RELATED நாடு ‘விக்சித் பாரத்’ என்ற இலக்குடன்...