- கார்த்தி
- ஆந்திரப் பிரதேசம்
- துணை முதலமைச்சர்
- பவன் கல்யாண்
- சென்னை
- நடிகர்
- ஆந்திர துணை முதல்வர்
- தேவஸ்தான அறங்காவலர் குழு
- ஜெகன்மோகன் ரெட்டி
சென்னை: லட்டு குறித்த தான் பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார். ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, கொள்முதல் செய்த தரமற்ற நெய் காரணமாக , லட்டு தரம் மிகவும் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு, திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை கையில் எடுத்தார். இதனையடுத்து கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய் மாதிரிகள், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவில், நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. நாடு முழுவதும் உள்ள பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லட்டு குறித்து நடிகர் கார்த்தி பேசிய விஷயம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்த மெய்யழகன் படத்தின் தெலுங்கு வெர்ஷன் விழாவில், நடிகர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளினி கேட்க, “அது ரொம்ப சென்ஸிடிவ், எனக்கு வேண்டாம்” என அவர் பதிலளித்தார். அதற்கு மோத்தி லட்டாவது வேண்டுமா என மீண்டும் கேட்ட தொகுப்பாளரிடம், “லட்டே வேண்டாம்” என கார்த்தி பதில் சொன்னார். லட்டு குறித்து கார்த்தி பதில் சொன்ன போது அரங்கம் அதிர்ந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது.
இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “லட்டு விவகாரத்தை பலரும் கேலி செய்வதை பார்க்க முடிகிறது. சமீபத்திய சினிமா நிகழ்வில் லட்டு சென்சிட்டிவ் டாப்பிக் என பேசப்பட்டுள்ளது. ஒரு நடிகராக நான் உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என வரும்போது, ஒரு வார்த்தை பேசுவதற்கு முன் நூறு முறை யோசிக்க வேண்டும்” என தெரிவித்தார். இந்நிலையில், தான் பேசியது குறித்து நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
The post லட்டு குறித்த தான் பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி appeared first on Dinakaran.