×
Saravana Stores

மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி மோசடி; அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

மதுரை: மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரைப் பயன்படுத்தி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குவாரி உரிமையாளரிடம் ரூ.6.80 கோடி மோசடி செய்தது தொடர்பாக, மதுரை அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் டி.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (51). இவர், அப்பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இவருக்கு, மதுரை நேரு நகரைச் சேர்ந்த சங்கரி என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். அப்போது சங்கரி, ‘தனக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஆகியோர் நெருக்கமானவர் என்றும், அவர்கள் மூலம் எந்த வேலையையும் முடிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், செல்லூர் ராஜூ தொடர்பான படங்களை சங்கரி பேஸ்புக்கில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதனால், செல்லூர் ராஜூக்கு சங்கரி நெருக்கமானவர் என நினைத்த சரவணன், தனக்கு மணல் குவாரி எடுக்க உதவும்படி கேட்டுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 2020 மார்ச்சில் சங்கரி, செல்வம், மகா, மாரி ஆகியோர் திண்டிவனத்துக்கு சென்று சரவணனை சந்தித்தனர். அப்போது அவர்கள் செல்லூர் ராஜூ மனைவியுடன் பேசுவதுபோல பேசி, சரவணனிடம் போனைக் கொடுத்துள்ளனர். எதிர்முனையில் போனில் பேசியவரும் சரவணனுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார். அதன்பின் இரண்டு நாட்களுக்கு பிறகு ரூ.25 லட்சத்துடன் சரவணன் மதுரைக்கு வந்து சங்கரியிடம் கொடுத்துள்ளார். 2020 ஏப்ரல் மாதம் சரவணன் மீண்டும் மதுரைக்கு வந்துள்ளார். அப்போது சங்கரி, மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மாயத்தேவனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அவர்களுடன் இருந்த பிருந்தா என்ற பெண்ணை செல்லூர் ராஜூவின் உறவினர் எனவும், அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் காரில் சங்கரி, மாயத்தேவன், பிருந்தா அகியோர் சரவணனை, செல்லூர் ராஜூ வீட்டுக்கு அழைத்துச் செல்வது போல, மதுரையை சுற்றிவிட்டு, பின்னர் செல்லூர் ராஜூ இல்லை என திரும்ப அழைத்து வந்துள்ளனர். அதன் பின் மூவரிடம் சரவணன் ரூ.1 கோடி வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சில நாட்களுக்கு பின்னர் சரவணனை தொடர்பு கொண்டு பேசிய சங்கரி, ‘பிருந்தா கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும், அவருடன் நீங்கள்தான் இறுதியாக பேசியுள்ளீர்கள். இதனால், போலீசார் உங்களை சந்தேகப்படுகிறார்கள். இந்த வழக்கில் இருந்து தப்ப வைக்க செல்லூர் ராஜூ, மாயத்தேவன் ஆகியோர் நினைத்தால் தான் முடியும் என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு சரவணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த கேஸில் இருந்து விடுவிக்க நான் உங்களுக்கு உதவுகிறேன் என சரவணனிடம் சங்கரி நைசாக பேசியுள்ளார். இதில், பயந்த சரவணன் பல தவணைகளில் மொத்தம் ரூ.6.80 கோடி வரை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் சந்தேகம் அடைந்த சரவணன், சங்கரி மற்றும் மாயத்தேவனிடம் பணத்தை கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரவணன் கொடுத்த புகாரின்பேரில், கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனிடையே, பணத்தை இழந்த சரவணன், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 27வது வார்டு அதிமுக கவுன்சிலர் மாயத்தேவன், சங்கரி, செல்வம், மகா, மாரி ஆகிய 5 பேர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், மதுரை மத்திய குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி மோசடி; அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Cellur ,Raju ,Madurai ,Metropolitan Councillor ,Viluppuram district ,minister ,Celluor Raju ,Cellur Raju ,Supreme Councillor ,Dinakaran ,
× RELATED மதுரையில் மழைநீர் தேங்கிய இடங்களில் அமைச்சர் ஆய்வு..!!