- தீப்தி ஜீவான்ஜி
- பாராலிம்பிக்ஸ்
- டி 20
- பாரிஸ்
- ஜனாதிபதி
- டிரவுபதி முர்மு
- மோடி
- தீப்தி
- பாராலிம்பிக்ஸ்!
- தின மலர்
நன்றி குங்குமம் தோழி
சமீபத்தில் பாரிஸில் நடந்த பாராலிம்பிக்கில் 400 மீட்டர் டி20 இறுதிப் போட்டியில் வெண்கலம் வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறார் தீப்தி ஜீவன்ஜி. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் தீப்தியைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர் பட்ட வேதனைகளும், வலிகளும்,
சந்தித்த சவால்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. ‘குரங்கு’, ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என என்னவெல்லாம் சொல்லி காயப்படுத்தமுடியுமோ அந்தளவுக்கு அவரை உள்ளூர் கிராம மக்கள் உருவ கேலி செய்தனர். அந்த ஏளனப் பேச்சுகளையும் உருவகேலியையும் தன் வெற்றியின் மூலம் உடைத்தெறிந்துள்ளார் தீப்தி. அவரின் திறமையும், விடாமுயற்சியும் பலருக்கு உத்வேகம் அளிப்பவை எனப் பேசும்படி செய்துவிட்டார்.
* யார் இந்த தீப்தி ஜீவன்ஜி…
தெலுங்கானா மாநிலத்தின் வாராங்கல் மாவட்டத்தில் கல்லேடா எனும் கிராமத்தில் 2003ம் ஆண்டு பிறந்தவர் தீப்தி. இவரின் தந்தை ஜீவன்ஜி யாதகிரி, தாய் ஜீவன்ஜி தனலட்சுமி. தங்கை அமுல்யா. பிறப்பிலேயே அறிவுசார் குறைபாடுள்ள குழந்தையாகப் பிறந்தார் தீப்தி. அதாவது, அறிவு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள். இந்தக் குறைபாடுள்ள குழந்தைகள் தகவல் தொடர்பு மற்றும் சட்டென புரிந்துகொள்ளும் தன்மை உள்ளிட்டவை இருக்காது.
‘‘தீப்தி சூரிய கிரகணத்தின் போது பிறந்தாள். அவள் பிறக்கும் போது தலை மிகவும் சிறியதாகவும், உதடுகள் மற்றும் மூக்கு சற்று அசாதாரணமாகவும் இருந்தது’’ என வேதனையுடன் சொல்லும் தாய் தனலட்சுமி, ‘‘இதனால் உறவினர்கள் உள்பட கிராமத்தினர் அவளை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், குரங்கு என்றும் கேலி செய்தனர். சிலர் அவரை அனாதை இல்லத்தில் சேர்க்குமாறு வலியுறுத்தினர். நாங்கள் அந்தத் தவறை செய்யவில்லை. ஆனால், இன்று, தான் ஒரு சிறந்த பெண் என்பதை இந்த உலகத்திற்கு அவள் நிரூபித்துவிட்டாள்’’ எனக் கண்ணீர்மல்க பெருமிதம் கொள்கிறார்.
தீப்தியின் தாத்தா இறந்தபோது அவர்களுடைய விவசாய நிலத்தை விற்க வேண்டியதானது. இதனால், தீப்தியின் தந்தை ஜீவன்ஜி யாதகிரி தினக்கூலி வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ரூ.100, ரூ.150 எனத் தினமும் கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் ஓடியது. தீப்தியும் இயல்பிலேயே அமைதியான பெண்ணாக வளர்ந்துள்ளார். கிராமத்தினர் அவரை உருவகேலி செய்யும் போதெல்லாம் தன் தாயிடம் வந்து அழுதுள்ளார். அப்போது அவருக்கு மொத்தக் குடும்பமும் ஆறுதலாக இருந்துள்ளது. அவர் 9ம் வகுப்பு படிக்கும்போது பள்ளி விளையாட்டு ஆசிரியர் அவரின் திறமையைக் கண்டு வியந்தார். தீப்தியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வேலைகளைச் செய்தார்.
இந்திய தடகள கூட்டமைப்பின் தேசிய ஜூனியர் அணி பயிற்சியாளரும் துரோணச்சார்யா விருது பெற்றவருமான நாக்புரி ரமேஷின் அறிமுகம், பள்ளி விளையாட்டு ஆசிரியர் மூலம் தீப்திக்குக் கிடைத்தது. ரமேஷ், தீப்தியை ஐதராபாத் அனுப்பும்படி பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார். வாராங்கல்லில் இருந்து 130 கி.மீ. தொலைவிலுள்ள ஐதராபாத்திற்கு அனுப்ப தீப்தியின் பெற்றோரிடம் பணம் இல்லை. இதனால் யோசித்தனர். உடனே பயிற்சியாளர் ரமேஷ், தீப்தியின் பெற்றோரிடம், தீப்தியை பஸ்சில் ஏற்றிவிட்டு கண்டெக்டரின் செல்போன் நம்பரை தனக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பிறகு, ரமேஷ் கண்டெக்டரிடம் பேசி ஐதராபாத் வந்ததும் பணத்தைத் தந்துவிடுவதாகவும், தீப்தியை பத்திரமாக அழைத்துவரும்படியும் கூறியுள்ளார்.
ஐதராபாத் வந்ததும் இந்திய விளையாட்டு ஆணையப் பயிற்சி மையத்தில் சேர்ந்தார் தீப்தி. அங்கு ரமேஷ் அவருக்குப் பயிற்சி அளித்தார். அவருக்கு உடனடியாக டெக்னிக்குகள் எதையும் அவர் கற்றுத் தரவில்லை. காரணம், அறிவு வளர்ச்சியில் குறைபாடுள்ளவர் என்பதால் தீப்திக்குக் குழப்பம் வரலாம் என்பதே! இதற்கிடையே தேசிய பேட்மிட்டன் விளையாட்டின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான புலேலா கோபிசந்த், தீப்தியை ஐதராபாத்தில் உள்ள அறிவுசார் குறைபாடுள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். அங்கே மருத்துவ ஆய்வு செய்யப்பட்டு அறிவுசார் குறைபாடு உள்ளவர் என்கிற சான்றிதழைப் பெற்றார். இதன் வழியாக பாரா போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றார் தீப்தி.
பாரா தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள சர்வதேச உரிமம் பெற வேண்டும். இதற்காக இரண்டு சர்வதேச போட்டிகளில் தீப்தி கலந்துகொள்வதற்கான நிதியுதவியை கோபி-மைத்ரா அறக்கட்டளை வழங்கியது. அப்படியாக மொரொக்கோ, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு சர்வதேச உரிமத்தைப் பெற்றார். கடந்த 2022ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் டி20 ஓட்டத்தில் கலந்து கொண்டார்.
இதில் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார். 56.69 வினாடிகளில் வந்து புதிய ஆசிய சாதனையும் படைத்தார். இதன் வழியாக அவருக்கு வெகுமதியாக ஒரு தொகையும் கிடைத்தது. இந்தப் பணத்தில் தீப்தியின் குடும்பத்தினர் புதியதாக நிலம் வாங்கி அதில் விவசாயத் தொழிலை மீண்டும் ெதாடங்கினர்.பின்னர் இந்த 2024ம் ஆண்டு மே மாதம் ஜப்பானின் கோபே நகரில் நடந்த உலக பாரா அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார்.
அதுமட்டுமில்லாமல் 55.07 வினாடிகளில் வந்து புதிய உலகச் சாதனையைப் படைத்தார். இப்போது பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று பலரையும் பாராட்ட வைத்துள்ளார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தீப்தியை பாராட்டியதுடன் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையும், குரூப் 2 பிரிவில் பணியும், வாராங்கல்லில் நிலமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பயிற்சியாளர் ரமேஷுக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அன்று ஏளனமாய் பேசிய வாய்கள் எல்லாம் இன்று அவரை தலைதாழ்ந்து புகழ்கின்றன. அதுமட்டுமில்லாமல் கல்லேடா கிராமத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் மின்னுகிறார் தீப்தி.
தொகுப்பு: செல்வி
The post உருவ கேலியை உடைத்தெறிந்து பாராலிம்பிக்கில் சாதித்த தீப்தி ஜீவன்ஜி! appeared first on Dinakaran.