×
Saravana Stores

டிஎன்பிஎல் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் கரூரில் இலவச பொது மருத்துவ முகாம்

*பங்கேற்ற 656 பேருக்கு சிகிச்சை

வேலாயுதம்பாளையம் : கரூர் அருகேயுள்ள காகிதபுரம் தமிழ்நாடு காகித ஆலை சார்பில் இலவச மருத்துவ நடைபெற்றது.கரூர் அடுத்த காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை(டிஎன்பிஎல்) சார்பில் ஆலையை சுற்றியுள்ள மக்களுக்கு சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் (சிஎஸ்ஆர்) இலவச மருத்துவ முகாம், குடிநீர், சாலை வசதி, இலவச தொழிற்கல்வி ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன.

அதில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் கோயமுத்தூர், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியன சார்பில் காகித ஆலையைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம மக்களின் நலனுக்காக இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் டிஎன்பிஎல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமினை, காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) நாகராஜன், பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் மற்றும் கோயமுத்தூர், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் அருள் செல்வன், (மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமில், ராயல்கேர் மருத்துவமனையைச் சார்ந்த 16 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இதில், இருதயம், நரம்பு, கல்லீரல், சிறுநீரகம், சர்க்கரை நோய், காய் நரம்பு கருள், எலும்பு, நுரையீரல், முடக்குவாதம், மகப்பேறு, கர்ப்பபை, பொது மருத்துவம் மற்றும் தோல் நோய் போன்ற அனைத்துவித நோய்களுக்கும் பொது மருத்துவ சிகிச்சை மற்றும் சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில், கலந்து கொண்டவர்களுக்கு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கு இரத்த அழுத்தம் பரிசோதனை, ஈ.சி.ஜி. பரிசோதனை, பி.எம்.டி. (BMD), பி.எப்படி (PFT) மற்றும் ஃபைப்ரோ ஸ்கேன் (FIBRO SCAN) பரிசோதனையும் செய்யப்பட்டது.

டாக்டர்கள் அருள் செல்வன், (மூளை மற்றும் நரம்பியல் நிபுணர்), கிருஷ்ண கிஷோர், (இருதயம் மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்), சந்திரமோகன், (இருதயநோய் சிகிச்சை நிபுணர்), சௌண்டப்பன், (கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்), கோபி கிருஷ்ணன், (சிறுநீரக மருந்தியல் நிபுணர்), மாதேஸ்வரன் மணி, (முடக்குவாத நோய் மருத்துவர்), வினோதா அருணாச்சலம், (மகப்பேறு மற்றும் பெண்கள் நலம்-லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்), பய்ய பாய்த்வா, (நுரையீரல் மருத்துவர்), செல்லப்பா, (இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்).

தேவி காயத்ரி, (பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர்), சபரீஸ், ஐஸ்வர்யா, கவிதா, விஷ்வ பிரியா, சுவாதி, (பொது நல மருத்துவர்கள்) மற்றும் ஐஸ்வர்யா, (தோல் நோய் மருத்துவர்). கரூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில், கரூர் மற்றும் காகித ஆலையைச் சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளிலிருந்து வந்த 656 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு மற்றும் மற்றும் பேருந்து வசதி இலவசமாக செய்து தரப்பட்டன.மருத்துவ முகாமினை காகித நிறுவனத்தின் மனித வளத்துறை பொது மேலாளர் (மனிதவளம்) கே. கலைச்செல்வன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.

The post டிஎன்பிஎல் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் கரூரில் இலவச பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Free Public Medical Camp ,Karur ,Velayuthampalayam ,medical camp ,Tamil Nadu Paper Mill ,Karur.The ,TNBL ,
× RELATED கரூர்- முக்கணாங்குறிச்சி இடையே சாலை...