வருசநாடு : வருசநாடு மலை கிராமங்கள் மழையின்றி வறண்டு காட்சியளிப்பதால், கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.வருசநாடு சுற்றுவட்டாரத்தில் உள்ள மலைகிராமங்கள், கடமலை-மயிலை ஒன்றியம், கண்டமனூர் பகுதிகளில் மலை மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்ப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கிராமங்களுக்கு அருகில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மலைகளுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வருசநாடு வட்டாரத்தில் போதுமான அளவில் மழை பெய்தது. அதனால் மலைகளில் செடிகள், புற்கள் செழுமையாக வளர்ந்து காணப்பட்டது. இதனால் கால்நடைகளுக்கு போதுமான அளவில் தீவனம் கிடைத்து வந்தது.
அதன் பின்னர் படிப்படியாக மழை குறையத் தொடங்கியது.ஜூன், ஜூலை மாதங்களில் போதுமான அளவுக்கு மழை கிடைக்கவில்லை. அதேவேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் செடிகள், புற்கள் காய்ந்தன. அவற்றையும் ஆடு, மாடுகள் தின்று தீர்த்தன.பின்னர் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சில நாட்கள் விட்டுவிட்டு மழை பெய்தது. ஆனால் புற்கள், செடிகள் செழிப்படைவதற்கு போதுமானதாக மழை இல்லை.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கிராமங்களில் மழை இல்லை. மேலும் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தற்போது மலைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. தொடர்ந்து மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவுவதால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சிலர் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தீவனங்களை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வறட்சி நிலவும் பட்சத்தில் தீவனப்பற்றாக்குறை காரணத்தால் கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் குளம், கண்மாய்களில் உள்ள நீர் வற்றாமல் இருக்கும். அத்துடன் புற்கள், செடிகள் செழுமையடைந்தால் தீவனப் பற்றாக்குறை சமாளித்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
The post மழையில்லாததால் வறட்சி வருசநாடு மலை கிராமங்களில் தீவன பற்றாக்குறை அபாயம் appeared first on Dinakaran.