எட்டயபுரம், செப். 24: விவசாய நிலங்களுக்கு பாதை கேட்டு எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எட்டயபுரம் தாலுகா குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் உள்ளது. இதன் வழியாக குளத்துள்வாய்பட்டி கிராம விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டி பாதை உள்ளது. கடந்த 4 தலைமுறையாக இந்த வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது இப்பாதை தனியார் பட்டா நிலத்து வழியாக செல்வதால் அந்நிலத்தின் உரிமையாளர், இவ்வழியாக செல்லக் கூடாது என்று பாதையை மறித்து விட்டனர். எனவே விவசாய நிலத்திற்கு செல்ல தங்களுக்கு பாதை வேண்டும் என கிராம மக்கள் திரண்டு வந்து எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த தாசில்தார் சங்கர நாராயணன், சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் பேசி ஒரு வாரத்தில் பாதை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார். இதையேற்று கிராம மக்கள், முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
The post விவசாய நிலங்களுக்கு பாதை கேட்டு எட்டயபுரம் தாலுகாவை கிராம மக்கள் முற்றுகை appeared first on Dinakaran.