×
Saravana Stores

இலங்கை கடற்படை சிறைபிடிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தமிழக மீனவர்கள்: சிறையில் தினமும் கொடுமை

* வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு

மண்டபம்: தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியும், அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து குடும்பங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மண்டபம் பகுதி மீனவர்கள் உள்பட தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இந்திய,இலங்கை சர்வதேச கடலோரப் பகுதிக்கு இந்திய கடலோர பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி ஆகிய ஆழ்கடல் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஆழ்கடல் பகுதியில் கடந்த 2012-2013ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து இன்று வரை 11 ஆண்டு காலமாக மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த கடலோரப் பகுதியில் ரோந்து பணி என சொல்லிக் கொண்டு இலங்கை கடற்படையினர் சிறிய கப்பல்கள் மற்றும் பெரிய படகுகளில் துப்பாக்கி மற்றும் கருங்கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் போன்ற ஆயுதங்களுடன் வந்து அத்துமீறி, தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடிக்கின்றனர். மேலும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற அட்டூழியத்தை செய்து வருகின்றனர். இதனால் மண்டபம் பகுதி மீனவர்கள் உள்பட தமிழக மீனவர்கள் தங்களது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி விசை படகுகளை இழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் இன்று வரை மீன் பிடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு தவித்து வருகின்றனர்.

இந்திய சர்வதேச கடலோரப் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மண்டபம் பகுதி மீனவர்கள் உள்பட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் சிக்கி கைது ஆகின்றனர். நடுக்கடலில் வைத்து கைது செய்யப்படும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக பொய் வழக்கை போட்டு இலங்கை சிறையில் 3 மாதங்களுக்கு குறையாமல் அடைத்து விடுகின்றனர். இதனால் மீனவர்கள் சிறையில் உணவு இல்லாமலும், தூங்க இடம் இல்லாமலும் அவதிப்படுத்துகின்றனர். தமிழக மீனவர்களை கொத்தடிமைகளாக சிறையில் வைத்து அச்சத்தை ஏற்படுத்தி விடுதலை செய்கின்றனர். சிறையில் இருக்கும் நாட்களிலேயே போதுமான மருத்துவ வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இந்த தகவல் குறித்து தமிழக பகுதியைச் சேர்ந்த மற்ற மீனவர்களுக்கு கிடைத்தவுடன் பதட்டத்தில் மீனவர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பும் வரை தங்கள் உயிர் பயத்திலேயே மீன் பிடிக்க மீனவர்கள் செல்கின்றனர். அதுபோல அந்த மீன் பிடிக்க கடலுக்கு சென்றோம். திரும்ப மீண்டும் வீட்டுக்கு வரும் வரை மீனவர் குடும்பங்கள் மிகவும் அவதிப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இதனால் மீனவரின் வாழ்வாதாரம் வருங்காலங்களில் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. மண்டபம் பகுதி மீனவர்கள் குடும்பங்கள் உள்பட தமிழக மீனவர்களின் ஆயிரக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த மீனவ குழந்தைகள் தங்கள் மேல் படிப்புகளுக்கு சமீப ஆண்டுகளாகவே படிக்க கல்லூரிகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் மீனவ சமுதாயங்களில் கல்வி அறிவு தற்போது வளர்ந்து வருகிறது. மேலும் தங்கள் மீனவ ஆண் குழந்தைகள் தங்கள் படிப்பறிவே பள்ளி பருவத்திலே முடிக்காமல் ஆயிரக்கணக்கான மீனவ ஆண் குழந்தைகள் மீட்கப்பட்டு மேற்படிப்புக்கு அனுப்புகின்றனர்.

இந்நிலையில் தாங்கள் மீன்பிடித் தொழிலை நம்பி மீனவர்கள் கடல் சார்ந்த படிப்புகள் மற்றும் பொறியியல் கல்லூரி படிப்புகள் மற்றும் அரசு தேர்வுக்கான படிப்புகளை படிக்க வைத்து படிப்படியாக தங்கள் குழந்தைகளை கல்வித் திறனை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதால், மீனவ குடும்பங்கள் தனியாரிடம் கடன் வாங்குவது, வங்கிகளில் கடன் வாங்குவது போன்ற இன்னல்களில் சிக்கி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடல் பரப்பு மிகப்பெரிய பெரியது. இந்த கடல் பரப்பில் இந்திய கடல் எல்லை இலங்கை கடல் இல்லை என்பது குறிக்க முடியாது. பல லட்சம் கிலோ மீட்டர் தொலைதூரத்தில் உள்ள கடல் பரப்பில் இருநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் கடல் எல்லையை குறிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் பறந்த கடல் பரப்பில் தமிழகப் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எங்கு மீன் பிடிக்க சென்றாலும், அது இலங்கை கடல் பரப்பு எனக் கூறி மீனவர்களை கைது செய்து செல்வது வாடிக்கையாக நடக்கிறது.  ஒன்றிய அரசின் மெத்தன போக்கு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு அழிவை தருகிறது. இருநாட்டு மீனவர்களை அழைத்து சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி, இருநாட்டு மீனவர்களும் மீன்பிடி வாழ்வாதாரத்திற்கு பாதிப்படையாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகளில் முதன்மை நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவை ஆண்டு வரும் பாஜக அரசு மீனவர்களை வதைத்து வரும் இலங்கை நாட்டுக்கு, பல கோடி ரூபாய் இனமாகவும், மானியமாக பல திட்டங்களுக்கு அள்ளிக் கொடுக்கின்றது.

ஆனால் இலங்கை, இந்திய சர்வதேச கடலோரப் பகுதியில் எல்லை தெரியாமல் கடலில் மீன் பிடிக்க தவறிச் செல்லும் மீனவர்களையும், இந்திய கடல் எல்லைக்குள்ளே வந்து இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து மிகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். இருநாட்டு மீனவர்களுக்கு சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி, இலகுவான தீர்ப்பை ஏற்படுத்தி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் தமிழக மீனவர்களை காப்பதற்கு ஒன்றிய அரசு முடியாமல், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், வாழ்வாதாரத்தை அளிப்பதையும் ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மண்டபம் பாம்பன்,ராமேஸ்வரம் கோட்டைப்பட்டினம், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை உள்பட தமிழக மீனவர்களின் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இலங்கை கடற்படை சிறைபிடிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தமிழக மீனவர்கள்: சிறையில் தினமும் கொடுமை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Union Government ,Dinakaran ,
× RELATED இலங்கை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை...