- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- துணை முதலமைச்சர்
- பவன் கல்யாண்
- திருமலா
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
- ஏழு மலையான் கோயில்
- திருப்பதி ஏசுமலையான் கோவில்
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருமலை: ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள், நகைகள் பாதுகாப்பாக உள்ளதா என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாரணை நடத்த வேண்டும் என்று துணை முதல்வர் பவன்கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்ட லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றி மற்றும் மாட்டு கொழுப்பு உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, இந்த சம்பவத்திற்காக ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டபதாகவும் 11 நாட்கள் விரதம் இருப்பதாகவும் துணைமுதல்வர் பவன் கல்யாண் அறிவித்திருந்தார். அதன்படி, குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நேற்றுமுன்தினம் சிறப்பு பூஜைகள் செய்து துணை முதல்வர் பவன்கல்யாண் தனது விரதத்தை தொடங்கினார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் மீது நம்பிக்கையுடன் பக்தர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்தை கடவுளுக்கு வழங்கும் பொருட்டு சொத்து பத்திரங்களை உண்டியலில் பக்தர்கள் போட்டு வருகின்றனர். அவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆந்திர பிரதேசத்தில் மட்டுமல்ல, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களிலும் அசையா சொத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களில் பல கட்டிடங்கள் உள்ளன. ஆனால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் கொடுத்த சொத்துக்களை விற்க முடிவு செய்து அறிவிப்பையும் வெளியிட்டது.
சுவாமியின் சொத்துகளை பாதுகாப்பதை விட, அவற்றை விற்றுவிடுவதற்கு அப்போதைய குழு துடித்தது ஏன்?, அவர்களை அவ்வாறு வழிநடத்தியது யார்? என்பதை நாங்கள் வெளியே கொண்டு வருவோம். வெங்கடேஸ்வர சுவாமியின் சொத்துக்களை முந்தைய அறங்காவலர் குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் பாதுகாத்தார்களா? அவற்றை விற்றார்களா? என்ற சந்தேகம் வருகிறது. சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை கூட்டணி அரசு ஏற்கும். எனவே இதற்காக தேவஸ்தான சொத்துகள் தொடர்பாக முந்தைய ஆட்சியில் எடுத்த முடிவுகள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்து, நகைகள் பாதுகாப்பாக உள்ளதா? விசாரணை நடத்த துணை முதல்வர் பவன் கல்யாண் வேண்டுகோள் appeared first on Dinakaran.