பொன்னேரி: பொன்னேரி மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் நடந்த சாலை விபத்துக்களில் 2 வாலிபர்கள் பலியாகினர். படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொன்னேரி அடுத்த பழவேற்காடு பீச்சுக்கு நேற்று மாலை கும்மிடிப்பூண்டி தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் பிறந்த நாளை கொண்டாட, கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆறு பைக்குகளில் 14 பேர் வாலிபர்கள் வந்திருந்தனர். அவர்கள் பழவேற்காடு பீச்சில் குளித்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பாலைவனம் அருகே உள்ள போளாச்சி அம்மன் குளம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அரசு பேருந்து மீது 2 வாலிபர்கள் வந்த ஒரு பைக் மோதியதில் பெரியபாளையத்தை சேர்ந்த வாலிபர் விக்கி(21) சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்திருந்த ஏளாவூர் கும்லி கிராமத்தை சேர்ந்த தீபக்(22) படுகாயம் அடைந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விக்கியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து சம்பந்தமாக அரசு பேருந்து டிரைவர் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த வினோத்(38) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த அருணா கட்டிட மேஸ்திரி அவரது மகன் துளசிராமன்(18) திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்ய நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பர் சந்தோஷ்(18) என்பவருடன் பைக்கில் பள்ளிப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த கோழிப்பண்னை மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் சதீஷ்(29) என்பவர் பள்ளிப்பட்டிலிருந்து சோளிங்கர் நோக்கி சென்ற போது சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துரை அலுவலகம் அருகில் 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் கல்லூரி மாணவர் துளசிராமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். சந்தோஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இருவேறு விபத்துகளில் இரண்டு வாலிபர்கள் பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.