×
Saravana Stores

குமரனும் கோசலை குமரனும்

திருப்பம் தரும் திருப்புகழ்! 9

‘குமரன்’ என்றால் இளமை நலம் பொருந்தியவன் என்று பொருள். முருகப் பெருமானை குமரன் என்றே குறிப்பிடுவது மரபு.

‘என்றும் இளையாய்! அழகியாய்!
ஏறூர்ந்தான் ஏறே!’
என்பது நக்கீரரின் தனிப்பாடல்.
‘என்றும் அகலாத இளமைக்கார’
என்றும்
‘முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்!’
எனவும் அருணகிரிநாதர் பாடுகின்றார்.

குமரனாகிய முருகப் பெருமானை கௌசல்யா தேவியின் குமரன் ஆன ராமபிரானோடு இணைத்துப் பாடுவதிலே, அலாதியான ஆனந்தம் கண்டவர் அருணகிரிநாதர்.சைவம், வைணவம் என்ற பேதமின்றி இணைந்து வாழ வேண்டும் இந்து மதம் என்ற பொது நோக்கிலே முருகப் பெருமானை ‘பெருமாளே!’ என்று அழைத்தும், திருமால் மருகன் திருமுருகன் என்றே திரும்பத்திரும்ப திருப்புகழில் பாடியும் சமய ஒற்றுமையை நிலை நாட்டியவர் அருணகிரிநாதர்.

திருச்செந்தூர் தலத்தில் அவர் பாடிய ‘தொந்தி சரிய’ எனத் தொடங்கும் திருப்புகழின் பிற்பாதியிலே’ எந்தை வருக! ரகுநாயக வருக’ என ராமபிரானின் தாயார் கௌசல்யா தேவி தன் அருமந்த புதல்வனை பாலுண்ண வருக! வருக என ஆசை மீதூர அழைப்பதாக அதிஅற்புதமாகப் பாடியுள்ளார்.ராமபிரான் சரித்திரத்தை பன்னிரண்டு ஆயிரம் பாடல்களில் காவியமாக இயற்றிய கம்பர்கூட அன்னை கௌசலை மைந்தன் ராமனை அன்புடன் பாலுண்ண வருக!

மலர் சூடிட வருக! என அழைப்பதாக வருணித்து பாடவில்லை. வால்மீகியும் ராமனின் குழந்தைப் பருவத்தைக் குறிப்பிடவில்லை! ஆனால் முருகப் பக்தரான அருணகிரிநாதர் கௌசலை ராமனைக் கொஞ்சி மகிழ்வதாக, ஒருமுறைக்கு பத்து முறை கூப்பிட்டு மகிழ்வதாகப் பாடி உள்ள இச்செந்தூர் திருப்புகழ் இலக்கிய, ஆன்மிக அன்பர்கள் பலரையும் கவர்ந்து களிப்படையவும், வியப்படையவும் வைத்துள்ளது.

‘அலையே கரை பொருத
செந்தில் நகரில் இனிதே
மருவி வளர் பெருமாளே!’

என முடிவடையும் இத்திருப்புகழின் முற்பகுதியில் முதுமைப் பருவத்தில் ஒவ்வொரு வரும் சந்திக்கும் இடர்ப்பாட்டையும், சரீரத் தளர்ச்சியையும் விவரிக்கும் அருணகிரியார் பிற்பகுதியில் கோசலைக் குமரனின் இளமைப் பருவத்தை அன்னை அழைப்பதாக அற்புதமாகச் சித்தரிக்கிறார்.

‘‘தொந்தி சரிய மயிரே வெளிற நீரை
தந்தம் அசைய முதுகே வளைய இதழ்
தொங்க ஒருகை தடிமேல் வரமகளிர் நகையாடி
தொண்டு கிழவன் இவன் ஆர் என
இருமல் கிண்கிண் என முன் உரையே குழற

விழி துஞ்சு குருடுபடவே செவிடுபடு செவியாகி
வந்த பிணியும் அதிலே இடையும் ஒரு
பண்டிதன் மெய்உறு வேதனையும் இள
மைந்தர் உடைமை கடன் ஏதென முடுகு துயர்மேவி

மங்கை அமுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே ஒழுக உயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும்!

வயது ஏற ஏற வாலிபம் குறைகிறது. வனப்பு மறைகிறது. வாட்டம் நிறைகிறது! கட்டுக்குலையாத இளமைமுறுக்கு தளர்கிறது.முதுமையில் மனிதர்க்கு என்னென்ன நேர்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் பாட்டு.பச்சை ஆலிலை போன்ற வயிறு பருத்த தொந்தியாகிச் சரிகிறது.கரிய தேசம் கொக்கின் நிறம்போல வெளுத்துவிடுகிறது.வரிசையான பற்கள் உறுதி குலைந்து விழுந்துவிடுகிறது.

கூன் முதுகு, வெளுத்துத் தொங்கும் உதடுகள் கோல் ஊன்றி தளர்ந்து நடக்கும் கோலம்,இளமையில் பெண்களைப் பார்த்து சிரித்த காலம் போய் முதுமையில் தளர்ந்த கிழவனைக் கண்டு பரிகசிக்கும் பாவையர் கூட்டம்.தொண்டைக்கு வெளியேயும், உள் புறமும் இருபக்கமும் தொல்லை கொடுக்கும் இருமல், செவிடாகிப் போன செவி, சரி வரப் பேச முடியாமை அப்பப்பா…. போதும் போதும்.பார்த்து பார்த்து வளர்த்த நம் உடம்பே நமக்கு எதிரியாகிவிடுகிறது வயதான கிழப்பருவத்தில்!

சரிந்துவிடும் சரீரத் தொல்லை போதாதென்று உடல் நலம் பரிசோதிக்க வந்த மருத்துவர் வேறு நாக்கை நீட்டு, கையைத் தூக்கு, திரும்பி குப்புறப் படு எனக் கண்டிப்புடன் இடும் கட்டளைகள்.இவற்றுக்கெல்லாம் மேலாக பெற்ற குழந்தைகளே எங்கெங்கு கடன் வாங்கியுள்ளாய், எத்தனை பணம் சேர்த்து வைத்துள்ளாய் எனத் துருவித் துருவிக் கேட்கும் தொல்லை.

கட்டிய மனைவியின் கதறல். கட்டில் மெத்தையே கழிவறையாகிப் போகும் அவலம். இத்தகைய பலவிதமான இன்னலிலே உயிர் மங்கும்பொழுதில் அபயம் அளிக்க ஆறுமுகப்பெருமானே! அடியேனைக் காக்க விரைந்து மயிலில் ஏறி வருக!

‘தொந்தி சரிய’ என ஆரம்பிக்கும் இச்செந்தூர் திருப்புகழின் பிற்பகுதியைப் பார்ப்போம்.

‘எந்தை வருக! ரகு நாயக வருக!
மைந்த வருக! மகனே இனி வருக!
என் கண் வருக! எனது ஆருயிர் வருக! அபிராம
இங்கு வருக! அரசே வருக! முலை
உண்க வருக! மலர் சூடிட வருக!

என்று பரிவினொடு கோசலை புகல வருமாயன்
சிந்தை மகிழும் மருகா! குறவர் இள
வஞ்சி மருவும் அழகா! அமரர் சிறை
சிந்த அசுரர் கிளை வேரொடு மடிய அடுதீரா!

திங்கள், அரவு, நதி சூடிய பரமர்
தந்தகுமர! அலையே கரைபொருத
செந்தினகரில் இனிதே மருவிவளர் பெருமாளே!
‘மன்னுபுகழ் கௌசலைதன் மணி வயிறு வாய்த்தவனே!’ என ஆழ்வார் பாடுகிறார்.

அன்னை கௌசலை ராமரை அன்புடன் வருக! வருக! என அழைப்பதை அதி அற்புதமான சந்தத்தில் அழகுறப்பாடுகின்றார் அருணகிரியார்.அர்த்தம் அனைவர்க்கும் விளங்கும் வண்ணம் எளிய தமிழில் பாடியுள்ளார் அருணகிரியார்.வருக! வருக! என எத்தனை முறை பாடலில் வருகிறது என எண்ணிப் பார்த்தால் பத்து முறை என அறியலாம். காரணம் என்ன தெரியுமா?

தசஅவதாரம் எடுத்து பூவுலகிற்கு வந்தவர் தானே பெருமாள்!‘அபிராம இங்கு வருக!’ என்ற அழைப்பு ஏழாவதாக இடம் பெறுகிறது. என்ன காரணம் அறிவோமா!ஏழாவது அவதாரம்தானே ‘ராம அவதாரம்!’

தெய்வீக உலகில் புகழ் பெற்ற குழந்தைகள் இரண்டு! ஒன்று சிவப்புக் குழந்தை! மற்றொன்று கறுப்புக் குழந்தை!சிவப்புக் குழந்தை! சைவக்குழந்தை! சிவன் குழந்தை! அக்குழந்தையை உச்சி மோந்து முத்தம் இட்டு உரிய அணிகள் பூட்டி கொஞ்ச வந்தவர்தான் அருணகிரியார்!முருகக் குழந்தையை அன்புடன் கொஞ்சவந்த அருணகிரியார் பக்கத்திலேயே கறுப்புக் குழந்தை- வைணவக் குழந்தை- ராமர் கன்னங்களிலே நீர்வழிய, கண்ணீருடன் நின்றிருப்பதைப் பார்த்தார்.

ராமா! ஏன் அழுகிறாய்! நிறம் கறுப்பு என்பதற்காக நீ அழமாட்டாய். ஏனென்றால் உன் கறுப்பு பலருக்கும் விருப்பு. ‘கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே! கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே! என்கிறார் இளங்கோ.ராமர் பதில் அளித்தார். கம்பரும், வால்மீகியும் என்னைப்பற்றிக் காவியமே பாடி உள்ள போதிலும் என் அம்மா ஆசையுடன் அழைப்பதாக ஒரு பாடலும் பாடவில்லையே! அதுதான் என் ஏக்கத்திற்குக் காரணம்! உடன் அருணகிரி நாதர் அக்குறையைப் போக்குகிறேன்! எனச் சொல்லியே இச்செந்தூர் பாடலில் பத்துமுறை பாசம் மீதூர கௌசலை அழைப்பதாகப் பாடினார்.

கற்பனை உரையாடல்தான் இது என்ற போதிலும் கருத்திற்கு விருந்தாக அமைகிற தல்லவா!குறவள்ளியின் மணாளனே! அசுரக் கூட்டத்தினரை அடியோடு அழித்து விண்ணுலகை விளங்கவைத்த வேலனே! சிவபாலனே! என்னும் வாழ்த்தோடு நிறைவு பெறுகிறது இத்திருப்புகழ்!

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

 

The post குமரனும் கோசலை குமரனும் appeared first on Dinakaran.

Tags : Kumaran ,Kosala Kumaran ,Lord Muruga ,Nakkeer ,Murugan ,
× RELATED செங்குன்றம் அருகே குமரன் நகரில் ட்ரோன் மூலம் உணவு