நன்றி குங்குமம் தோழி
இயற்கையின் உன்னதப் படைப்புகளுள் ஒன்றான மஞ்சள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடையே உணவாகவும், மூலிகை மருந்தாகவும், அழகு சாதனப் பொருளாகவும், இயற்கை நிறமியாகவும் பற்பல பயன்களைத் அள்ளித்தரும் அற்புதத் தாவரமாய் இருப்பதுடன், மங்கலம் சேர்க்கும் தெய்வீகப் பொருளாகவும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இரண்டறக் கலந்துள்ளது. ஆம். தனது அளப்பரிய மருத்துவ குணங்கள் காரணமாக, பல்வேறு உடல் நோய்களுக்குத் தீர்வாகவும், ஆரோக்கியத்தைக் கூட்டும் அருமருந்தாகவும் விளங்கும் மஞ்சள் இருக்கும் இடங்களிலெல்லாம் ‘பொன்மகள் குடியிருப்பாள், பொருள் கோடி தருவாள்’ எனும் நம்பிக்கையை மக்களிடத்தில் விதைக்கிறது. அதனால்தான், சுபநிகழ்வுகளில் மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
பல்வேறு சிறப்புகள் நிறைந்த மஞ்சள் குறித்து, அதிர்ச்சிகரத் தகவலை JAMA (Journal of American Medical Association) நாளேடு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கல்லீரல் பாதிப்புகளை அதிகளவில் ஏற்படுத்தும் HDS (Herbal & Dietary Supplements) எனப்படும் மூலிகை மற்றும் உணவு ஊட்டங்களில் ஆறு உணவுகளை எடுத்துக்கூறும் இந்த மருத்துவ நாளேடு, அவற்றுள் மஞ்சள், அஸ்வகந்தா, க்ரீன் டீ மற்றும் கார்சினீயா ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது. இந்த அமெரிக்க ஆய்வைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, மஞ்சள் தாவரம் குறித்தும், இதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் இது நமக்களிக்கும் பலன்களையும் ஆழமாகத் தெரிந்துகொள்வோமா?!
Curcuma longa என்ற தாவரப்பெயர் கொண்ட Turmeric எனப்படும் மஞ்சள் தோன்றிய இடம் இந்தியா. இஞ்சி குடும்பத்தைச் சார்ந்த பசுமையான குத்துச்செடிகளின் வேரில் உள்ள மஞ்சள் கிழங்குகளில் நிறைந்துள்ள குர்க்யூமின் (Curcumin) எனும் அடர்மஞ்சள் நிற வேதிப்பொருளே, தாவரப் பெயருக்கும் அதன் மூலிகை குணங்களுக்கும் காரணம். Turmeric என்கிற ஆங்கிலப் பெயர் லத்தீன் மொழியின் ‘Terra Merita’விலிருந்து பெறப்பட்டது என்கிறது வரலாறு. இதற்கு ‘மண்ணிலிருந்து பெறப்படும் மதிப்புமிக்க பொருள்’ என்ற பொருளும் உண்டு. அடர் மஞ்சள் நிறம் காரணமாய் ‘ஹல்தி’ என வடமொழியில் சொல்லப்படுவதுடன், சமஸ்கிருத மொழியில் இதற்கு 53 பெயர்கள் உள்ளனவாம்.
கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளாக நம்மிடையே பயிரிடப்பட்டு வரும் இந்த வெப்ப மண்டலத் தாவரம், 700 ஆம் ஆண்டில் சீனாவிற்கும், 1200 ஆம் ஆண்டில் ஆப்ரிக்க நாடுகளுக்கும், 18 ஆம் நூற்றாண்டில் ஜமைக்காவிற்கும் வணிகச் சாலை (silk road) வழியாக சென்றடைந்ததாக வரலாறு கூறுகிறது. 62 சதவிகித மஞ்சளை உற்பத்தி செய்கிற இந்தியா, உலக மஞ்சள் உற்பத்தியில் முன்னிலை வகிப்பதுடன், மஞ்சளை அதிகம் கொள்முதல் செய்யும் நாடாகவும் இருக்கிறது.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படுவதால், ‘மஞ்சள் நகரம்’ என்றே ஈரோடு அழைக்கப்படுகிறது. அதேபோல் ஆரவல்லி மலைத்தொடரின் கீழுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் துங்கார்பூர் மாவட்டம், ஈரோட்டின் மஞ்சள் விதைகள் கொண்டு மேற்கொண்ட விவசாயத்தால் மற்றுமோர் மஞ்சள் மாவட்டமாக இடம்பெற்றுள்ளது. வெப்ப மண்டல நாடுகளில் களிமண் பூமியில் வளரும் மஞ்சள், இந்தியா மட்டுமல்லாது, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.
7 முதல் 9 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் மஞ்சள் வேரில் உள்ள பசுங்கிழங்குகளை பறித்து, வேகவைத்து, காய வைத்து அரைத்த பின்னரே மஞ்சள் பொடி பயன்பாட்டிற்கு வருகிறது. அடர் மஞ்சள் நிறத்தினால் ஓர் இயற்கை நிறமியாக (சாயமாக) உணவிலும் உடையிலும் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ‘இந்தியக் குங்குமப்பூ’ (Indian Saffron) எனவும், ‘பொன்னிற நறுமணப் பொருள்’ (Golden Spice) எனவும் அழைக்கப்பட்ட நிலையில், இதன் மருத்துவ குணங்கள் தெரிந்த பிறகு, ‘மூலிகை மஞ்சள்’ என்கிற பெயருடன் சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் பயன்படுகிறது.
ஆசிய நாடுகளில், குறிப்பாக சீன, ஜப்பானிய, பெர்சிய, எகிப்திய மற்றும் தாய்லாந்து மருத்துவ முறைகளில் மஞ்சளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஹவாய் மக்கள் பன்னெடுங்காலமாக சளி மற்றும் வயிற்று உபாதைகளுக்கு மஞ்சளை பயன்படுத்தி வருகின்றனர். ஆசிய ஆப்ரிக்க நாடுகள், அரபு நாடுகளும் மஞ்சளை மருந்தாக உபயோகிப்பதுடன், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் குர்க்யூமின் எண்ணெய், குர்க்யூமின் மாத்திரைகள் என மஞ்சளைக் கொண்டாடித் தீர்க்கின்றன.
உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய கட்டமைப்பு மற்றும் அமெரிக்க எஃப்டிஏ (FDA) எனும் உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்புகளும் மஞ்சளையும் அதன் குர்க்யூமினையும் முழுமையாக அங்கீகரித்துள்ளன. குர்க்யூமின் (Curcumin) எனப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் டர்மரின் (turmerin) நிறமியே இதன் மருத்துவ குணங்களுக்கும் பெரிதும் காரணம் என்கிற அறிவியல், இந்த தாவர சத்துகளில் நோயெதிர்ப்புத் திறன், அழற்சி எதிர்ப்பு பண்பு, ஆக்சிஜனேற்ற நிலை, புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட சிறப்புப் பண்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
தனது சிறப்பு மருத்துவ குணங்களான ஆன்டிசெப்டிக், ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-ஆக்சிடென்ட், ஆன்டி-ரூமேடிக், ஆன்டி-ஏஜிங் என மனிதனின் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் வல்லமை மிக்க இந்த குர்க்யூமினுடன், மஞ்சளில் உள்ள மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களும், ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும், தையமின், நியாசின், அஸ்கார்பிக் அமிலம் உள்ளிட்ட வைட்டமின்களும் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதுகாக்கின்றன என்கிறது மருத்துவ
அறிவியல். கோவிட் தொற்றில் குர்க்யூமின் மாத்திரைகள் வைரலானதும் நினைவிருக்கலாம்.
ஒரு கிருமிநாசினியாக, பசியைத் தூண்டும் உணவாக, ரத்தத்தை சுத்திகரிக்கும் புத்துணர்ச்சி பானமாக, வலி நிவாரணியாக, தோலில் காயங்கள், பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் கட்டிகளைக் கரைக்கும் சருமப் பாதுகாப்பு நிவாரணியாக, காய்ச்சல், சளி, இருமலைத் தணிக்கும், குடற்புழுக்களை அகற்றும், தசைகள் மற்றும் தசைநார்களுக்கு வலிமை தரும் அருமருந்தாக, ஏன்..? கருப்பை பிரச்னைகளுக்கும் தீர்வாக விளங்கும் மஞ்சள், நாட்பட்ட நுரையீரல் நோய், இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன், கல்லீரல் மற்றும் பித்த நோய்கள், சிறுநீரக நோய்கள், கண் மற்றும் தோல் அழற்சி, மூட்டுவியாதி நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கிறது.
மேலும் Brain Derived Neurotrophic Factor (BDNF) என்ற மூளையின் ஊக்கியைத் தூண்டி நரம்புகளை வலுப்படுத்துவதால், அல்சைமர் நோய், பார்க்கின்சன் நோய் உள்ளிட்ட மூளைத்தேய்வு நோய்களுக்கும், தூக்கமின்மைக்கும், மன அழுத்தத்திற்கும் மஞ்சள் அருமருந்தாகிறது என்கிறது சமீபத்திய ஆய்வுகள். இவையனைத்திற்கும் மேலாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மார்பகப் புற்றுநோய், சினைப்பை, நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய் ஆய்வுகளில், டிஎன்ஏவின் அதீத வளர்ச்சியையும், இன்டர்லூகின் மற்றும் சைட்டோகைன்களைக் கட்டுப்படுத்தும் புரதங்
களையும் (apoptotic protein) மஞ்சளின் டர்மரின் (Turmerine) அதிகரிப்பதால் புற்றுநோய்க்கான மருந்தாக எதிர்காலத்தில் மஞ்சளைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது என்கிறது.
இவ்வளவு நன்மைகளை பயக்கும் மஞ்சளின் ஃபாலிபீனால்களான குர்க்யூமின் மற்றும் டர்மரின் இரண்டும் எண்ணெயில் மட்டுமே கரையும் தன்மை உடையவை. அதாவது மஞ்சளின் செரிமானம் வெறும் நீரில் முழுமையடையாது என்பதுடன், சமையல் எண்ணெய், பால், மிளகு, அசைவ உணவுகள் அனைத்தும், உணவில் மஞ்சளை அதிகளவில் செரிமானம் செய்ய
உதவுகின்றன என்கிறார்கள் உணவு ஊட்ட வல்லுநர்கள்.
காய்ச்சல், சளி, தொண்டை வலிக்கு, வீட்டு வைத்தியமாய் தரப்படும் மிளகு ரசம், மஞ்சள் பால், சிக்கன் சூப் என அனைத்திலும் மஞ்சள் உடலுக்குள் சென்றடையும் ரெசிபிகளே உள்ளது என்பதுடன், நமது இந்திய வகை உணவுகளிலும், ஈரானிய ‘கோரேஷ்’ உணவிலும், வியட்நாமிய ‘பான் ஜியோ’ உணவிலும், தென் ஆப்பிரிக்காவின் ‘கீல்ரிஸ்’ உணவிலும், மொராக்கோவின் பல்வேறு க்யூசின்களிலும் மஞ்சள் வியாபித்துள்ளது. ஃபிலிப்பைன்ஸில் மஞ்சள் டீ ஒரு பிரத்யேக பானம் என்றால், தாய்லாந்தின் தேங்காய் மஞ்சள் லாட்டே மற்றும் பசுமஞ்சள் கிழங்கு சூப் பிரசித்தி பெற்றதாகும். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஹெர்பல் டீயாக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
எந்தவொரு உணவைப் போலவே, மஞ்சளிலும் ஒவ்வாமை சிலருக்கு ஏற்படலாம் என்பதுடன், இந்த ஒவ்வாமையில் தோல் அழற்சி தொடங்கி வயிற்றுப் புண், கணைய அழற்சி, மூச்சுத்திணறல் வரை பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். பொதுவாக ஒவ்வாமை கிழங்கு மஞ்சளைக் காட்டிலும் அதிலிருந்து பெறப்படும் குர்க்யூமின் மருந்துகளில், அதாவது அதிகளவிலான (450 மி.கி.க்கும் மேலான) மஞ்சள் வடிமத்தில்தான் அதிகம் காணப்படுகிறது. மஞ்சளிலுள்ள அதிகப்படியான ஆக்ஸலேட்கள் சமயத்தில் சிறுநீரக கற்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. அத்துடன் ரத்த உறைவை தாமதப்படுத்தும் தன்மையும் மஞ்சளில் உள்ளது. இதற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள், தக்க ஆலோசனை பெறுவதும் அவசியம். ஒரு நாளில் 5-20 கிராம் அளவு மஞ்சள் உபயோகிப்பதை சரியான அளவு என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
அமெரிக்க மருத்துவ அமைப்பின் கல்லீரல் பாதிப்பு குறித்த ஆய்வில், மூலிகை மற்றும் உணவு ஊட்டங்களில் கல்லீரல் நோயை ஏற்படுத்தும் ஒன்றாக மஞ்சளைக் குறிப்பிட்டுள்ளது, மேற்சொன்ன 450 மி.கிக்கும் அதிகமான அளவு என்பதுடன், இந்த அளவு குர்க்யூமின் மாத்திரைகளில் மட்டுமே சாத்தியம் என்பது புரிகிறது. அதுமட்டுமின்றி மஞ்சளில் ஈயம் உள்ளிட்ட தாதுக்கள் கலப்படங்களும் நிகழ்கிறது என்பதால் இன்னும் அதிக ஆய்வுகள் தேவை என்பதே சரி. மேலும் இதுபோன்ற ஆய்வுகளுக்கு நீண்ட வருடங்களாக அதிகம் உபயோகிக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளே சரியான தேர்வு. நமது அரசு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். அதுவரையில், ‘‘தி அல்டிமேட் மஞ்சள்” கிழங்குடன் நமது நாட்கள் சிறக்கட்டும்..!
(இயற்கைப் பயணம் நீளும்!)
The post மஞ்சள் இயற்கை 360° appeared first on Dinakaran.