நன்றி குங்குமம் தோழி
ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேரம் வேலை பார்ப்பதற்கு நாமே ஏன் சொந்தமாக ஒரு தொழில் செய்யக்கூடாது என்ற எண்ணம்தான் இன்று பலருக்கு உள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்வது உணவகங்களைதான். ஆனால் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று பலருக்கு தெரிவதில்லை. தங்களுக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு ஆரம்பித்தாலும், ஆறு மாசத்திற்கு மேல் அதனை நடைமுறைப் படுத்த முடியாமல் திணறுகிறார்கள். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதற்கு சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும். அது மிகவும் முக்கியம். அதைத்தான் கிஷோர் செய்து தருகிறார். இவரின் ‘மிக்சாலஜி’ நிறுவனம் மூலம் ஒரு உணவகம் அமைக்க மட்டுமில்லாமல் அதனை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களையும் அமைத்து தருகிறார்.
‘‘நான் உணவுத் துறையில் 26 வருடம் வேலை பார்த்திருக்கிறேன். அதில் கிச்சன் மட்டுமில்லாமல், நிர்வாக துறை, ஆய்வு துறை என ஓட்டல் பிசினசில் பல்வேறு துறையில் அனுபவம் பெற்றிருக்கிறேன். நான் உணவுத் துறையில் வேலையில் இருந்த போது, ஒவ்வொரு துறையிலும் ஒரு திறமைசாலிகள் இருப்பார்கள். கிச்சனில் அவர் செய்யும் சைனீஸ் உணவிற்கு ஈடு இணை இருக்காது. அதே போல் நிர்வாகத் திறமையில் சிலர் மிளிர்வார்கள். ஆனால் இவர்களுக்கு அந்த வேலையைத் தாண்டி வேறு எதிலும் ஈடுபாடு இருக்காது. தன்னுடைய தொழிலை அவ்வளவு விரும்பி செய்வார்கள். இவர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விரும்பினேன். உணவகம் அமைப்பது குறித்த கன்சல்டன்சி ஒன்றை துவங்கினேன்.
அதில் பல துறையில் சிறந்தவர்களை தேர்வு செய்து அந்தந்த துறைக்கு ஏற்ப நியமித்தேன். இதன் மூலம் ஒரு உணவகம் அமைக்க அனைத்தும் செய்து கொடுக்க ஆரம்பித்தோம். ஆனால் இந்த நிறுவனத்தை முழுமையாக செயல்படுத்த துவங்கும் முன் உணவு துறையின் மார்க்கெட் நிலவரம் எவ்வாறு உள்ளது என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டோம். அதனால் பல இடங்களுக்கு பயணம் செய்தோம். அங்குள்ள மார்க்கெட் நிலவரம், மக்களின் விருப்பம், மாறி வரும் உணவு முறைகள், இன்றைய டிரெண்ட் குறித்து ஆய்வு செய்தோம்.
ஒரு உணவகத்தை அமைக்கும் போது அதன் உள் அலங்காரம், உணவு மட்டுமில்லாமல் மார்க்கெட்டில் நிலைக்க என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டேன். இந்த கன்சல்டன்சியின் ஆரம்ப நிலையில் நான் வேலையில் இருந்து கொண்டு பகுதி நேரமாகத்தான் இதில் ஈடுபட்டு வந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டிலும் என்னால் கவனம் செலுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்து முழுமையாக கன்சல்டன்சி தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன்’’ என்றவர், மிக்சாலஜியின் செயல்கள் குறித்து விவரித்தார்.
‘‘உணவகத்தில் உணவு மட்டும் பிரதானமில்லை, அதன் உள் அலங்காரம், உணவகம் அமைக்கப்படும் இடம், அங்கு பயன்படுத்தப்படும் தட்டு, டம்ளர் போன்ற கட்லரி பொருட்கள், விளக்குகள், பிசினஸ் நுணுக்கங்கள், மக்களை கவரக் கூடிய அனைத்து விஷயங்களிலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போது சென்னை மட்டு மில்லாமல், கோவா, பெங்களூர், ஐதராபாத் போன்ற இடங்களில் உணவகம் அமைக்க வழிவகுத்து தருகிறோம். எந்த இடத்தில் என்ன உணவகம் அமைத்தால் சக்சஸ்ஃபுல்லாக இருக்கும் என்று தெரிந்து அதற்கு ஏற்ப செயல்படுகிறோம். கல்லூரி இருக்கும் சாலையில் ஃபைன் டைனிங் கொண்ட மல்டி ரெஸ்டாரன்ட் ஒன்றை அமைத்தால் அதனை வெற்றிகரமாக நடத்த முடியாது. கல்லூரி மாணவர்கள் டைனிங் செய்வதற்கு பதில் சின்ன கஃபே போன்ற ஹாங்அவுட் இடங்களைதான் விரும்புவார்கள். டீ, காபி மற்றும் ஸ்நாக்ஸ் உள்ள சிறிய கஃபே அமைத்தால் கண்டிப்பாக சக்சஸ்ஃபுல்லாக நடத்த முடியும்.
அதனால் முதலில் எந்த மாதிரியான உணவகம் எங்கு அமைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அங்குள்ள உணவு. தரமான எந்த உணவிற்கும் மக்களின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட உணவினை சுவைக்கவே அந்த உணவகத்திற்கு மீண்டும் மீண்டும் வருவார்கள். ஆனால் பலர் செய்யும் மிகப்பெரிய தவறு தங்களின் மெனுக்களை ஆறு மாதம் ஒரு முறை மாற்றுவதுதான். இந்த மாற்றம் அவசியம் தான்.
ஆனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவு என்ன என்று தெரிந்து கொண்டு அதை தவிர்த்து உணவில் மாற்றத்தை கொண்டு வரலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் புது வாடிக்கையாளர்களையும் ஈர்க்க முடியும்’’ என்றவர், ஒரு உணவகத்தின் உள் அலங்காரம், கட்டிட அமைப்பு, அங்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனைத்தும் அவரே தயாரித்து தருவதாக தெரிவித்தார்.
‘‘உணவகத்தில் மிகவும் முக்கியமானது அங்குள்ள உபகரணங்கள். அதாவது, காபி டிக்காஷன் போட வேண்டும் என்றால், அதற்கு தனிப்பட்ட இயந்திரம் அவசியம். அதே போல் அங்கு தண்ணீர் குடிக்க கண்ணாடி டம்ளர்கள் மற்றும் உணவு சாப்பிட பீங்கான் அல்லது சில்வர் தட்டுகள் அவசியம். இதனை அமைத்து தர இடைப்பட்ட தரகர்கள் இருப்பார்கள். இவர்கள் மூலம் பொருட்களை வாங்கினால், பொருட்களுக்கு மட்டுமில்லாமல் இவர்களுக்கும் விலை கொடுக்க வேண்டும். அதை கட்டுப்படுத்த எந்தவித தரகர்களும் இல்லாமல் நேரடியாக தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புகொள்ள உதவுகிறோம்.
சிலரிடம் இடம் இருக்கும். அதில் இனிமேல்தான் கட்டிடம் எழுப்ப வேண்டும். ஒரு சிலருக்கு உள் அலங்காரம் மட்டும் செய்ய வேண்டும் என்பார்கள். இவர்கள் இருவரின் தேவை குறித்து ஆலோசித்து இத்தாலியன் முதல் இந்தியன் ஸ்டைல் என அனைத்தும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தருகிறோம். மேலும் உணவகத்தில் உள்ள மேசை, கண்ணாடி டம்ளர் போன்ற கட்லரி பொருட்களுக்கான தயாரிப்பு யூனிட் எங்களிடம் இருப்பதால், அவர்கள் விரும்பும் டிசைனில் நாங்களே தயாரித்து தருகிறோம். ஒரு உணவகம் அமைக்க இடம், பிசினஸ் மற்றும் டூரிஸ்ட் மூன்றும் முக்கியம்.
உணவகம் அமைக்கப்படும் இடம், அங்குள்ள பாரம்பரியம், கலாச்சாரம் எல்லாம் சார்ந்து இருக்க வேண்டும். பிசினஸ் என்று பார்க்கும் போது, எந்த இடத்தில் எப்படிப்பட்ட உணவகம் அமைத்தால் பிசினஸ் நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொள்வது நல்லது. டூரிஸ்ட் பொறுத்தவரை உலகம் முழுக்க மக்கள் வரும் இடம். அங்கு அமைக்கப்படும் உணவகத்தில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அப்கிரேட் செய்யலாம்.
மேலும் ஒரு உணவகம் அமைத்தால் அதனை ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்காணிப்போம். அதன் மூலம் பிரச்னை உள்ள இடங்களில் தீர்வு காண்போம். அதன் பிறகு வருடத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்வோம். இதனால் நிலையான வருமானம் அவர்களுக்கு கிடைக்கும்படி திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை வகுத்து தருகிறோம். மேலும் ஏற்கனவே இயங்கும் உணவகம், ஆனால் பெரிய அளவில் வருமானம் இல்லை என்றால், நிலையான வருமானம் கிடைக்க என்ன செய்யலாம் என்ற ஆய்வில் ஈடுபட்டு அதற்கான வழியும் ஏற்படுத்தி தருகிறோம். தற்ேபாது இந்தியாவில் குறிப்பிட்ட இடங்களில்தான் எங்களின் சேவை உள்ளது என்பதால், அதனை இந்தியா முழுக்க விரிவாக்கும் எண்ணம் உள்ளது’’ என்றார் கிஷோர்.
தொகுப்பு: ஷன்மதி
The post உணவகம் துவங்க வேண்டுமா? நாங்க வழிகாட்டுகிறோம்! appeared first on Dinakaran.