×
Saravana Stores

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் மோடியை சந்தித்த பாலஸ்தீன அதிபர்: ஐ.நா உறுப்பினராக்க இந்தியா ஆதரவு

நியூயார்க்: இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் பிரதமர் மோடியை பாலஸ்தீன அதிபர் சந்தித்தார். பாலஸ்தீனத்தை ஐ.நா உறுப்பினராக்க இந்தியா ஆதரவளிக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கு மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் நியூயார்க்கில் தங்கியிருந்த பிரதமர் மோடியை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நேரில் சந்தித்தார்.

அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே போர் நடந்து வரும் வேளையில், பாலஸ்தீன அதிபர், பிரதமர் மோடியை சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. அப்போது ​​காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த கவலையை பாலஸ்தீன அதிபரிடம் தெரிவித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, போர்நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண அழைப்பு விடுத்தார்.

மேலும் பிராந்தியத்தில் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்து கூறினார். பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கூறிய மோடி, பாலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக்குவதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தார். இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, பாலஸ்தீன அதிபர் மேதகு மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார். காசா மற்றும் பாலஸ்தீனத்தில் நிலவும் மனிதாபிமான நிலைமை குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவின் ஆதரவு குறித்தும் எடுத்து கூறப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

The post இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் மோடியை சந்தித்த பாலஸ்தீன அதிபர்: ஐ.நா உறுப்பினராக்க இந்தியா ஆதரவு appeared first on Dinakaran.

Tags : PRESIDENT ,MODI ,ISRAEL ,HAMAS WAR ,IS ,India ,NA ,NEW YORK ,MODI AMID ,HAMAS ,Palestine ,NRA ,United States ,Dinakaran ,
× RELATED உலகமே விரும்பும் நபராக உள்ள பிரதமர்...