×
Saravana Stores

நாடாளுமன்றம் முன்பாக நடைபெறும் போராட்டத்தில் கூடலூரின் முக்கிய பிரச்னைகளை எதிரொலிக்கும்

*அகில இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகி பேட்டி

கூடலூர் : அகில இந்திய கிசான் சங்கத்தின் தர்ணா போராட்டத்தில் கூடலூர் வாழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை நாட்டின் அனைத்து மக்களுக்கும் அறியச் செய்வோம் என நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அகில இந்திய கிசான் சங்கத்தின் சார்பில் வரும் 25ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் முன் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அகில இந்திய கிசான் சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்திய விவசாயிகள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் சுமார் 25 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

தர்ணா போராட்டம் குறித்து நேற்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் வாசு நிருபர்களிடம் கூறியதாவது, ‘கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் சிறுகுறு விவசாயிகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வன விலங்குகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். 100க்கும் அதிகமான மனித உயிர்கள் பலியாகியுள்ளன.

விவசாய பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இப்பிரச்னையில் விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. வன உயிரினங்களால் பாதிக்கப்படும் விவசாய பயிர்கள், மற்றும் மனித உயிர்களுக்கு முழுமையான இழப்பீடுகள் வழங்க வேண்டும். குறிப்பாக யானைகள் தாக்கி உயிரிழக்கும் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை ஒரு கோடி ரூபாயாக வழங்க வேண்டும்.
கூடலூர் சட்டமன்றத் தொகுதி மக்களை பாதிக்கும் புதிய யானை வழித்தட வரைவு திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா வருமானத்தை பாதிக்கும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். வன உரிமை சட்டம் 2006 ஐ தமிழ்நாட்டில் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் உட்படுத்தப்பட்ட 2 எக்டருக்கும் குறைவான நிலங்களை சட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும். 50 ஆண்டுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் உள்ள பிரிவு 17 நிலப் பிரச்னைய தீர்த்து அதில் வாழும் விவசாய குடும்பங்களுக்கு நில உரிமை வழங்க வேண்டும்.

மின் இணைப்பு கிடைக்காமல் உள்ள சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். புதிய சட்டங்கள் மூலமாக கூடலூர் சட்ட மன்ற தொகுதி வாழ்வாதாரங்களை பாதிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்து டெல்லியில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் கூடலூர் பகுதி பிரதிநிதிகள் சார்பில் முன்வைக்கப்படும் என தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் யோகண்ணன், மாவட்ட பொருளாளர் குஞ்சு முகமது, மாவட்ட குழு உறுப்பினர் குஞ்சு முகம்மது, பகுதி செயலாளர் சுரேஷ், பகுதி ஜோஸ், செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post நாடாளுமன்றம் முன்பாக நடைபெறும் போராட்டத்தில் கூடலூரின் முக்கிய பிரச்னைகளை எதிரொலிக்கும் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Cuddalore ,All India Farmers Union ,Gudalur ,Nilgiri District Farmers Union ,Kudalur ,All India Kisan Sangh ,
× RELATED ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்...