*சுற்றுலாத்துறை அமைச்சர் உறுதி
ஊட்டி : நீலகிரி மாவட்ட அளவில் தீர்க்க முடியாத கோரிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும் பட்சத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரம்,மின்சார வாரியம்,மகளிர் திட்டம்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேட்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டி தமிழகம் மாளிகையில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அறிவித்த திட்டங்களின் நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.மேலும் மக்களை தேடி மருத்துவம்,வருமுன் காப்போம் திட்டம்,கண்ணொளி காப்போம் திட்டம்,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்,நடமாடும் மருத்துவ சேவை, இன்னுயிர் காப்போம் – நம்மை காப்போம் 48 திட்டம், முதலமைச்சரின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்தும், மகளிர் உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு,பண்ணை சார்ந்த வாழ்வாதார திட்டங்கள், இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி, வேலைவாய்பபு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், சுய உதவிக்குழுக்களுக்கான திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நலிந்த நிலையில் உள்ள தலைசிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்ட விவரங்கள், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்,மீன் வளத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள உயர்மட்ட குளிர்ந்த நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல்,பட்டு வளர்ச்சித்துறை சார்பில் குன்னூர் அரசு விதை பண்ணையில் ஒருங்கிணைந்த பட்டு வளர்ச்சி மற்றும் சுற்றுலா மையம் தொடர்பாகவும்,தாட்கோ திட்டங்கள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம், மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கினர்.
தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேசியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களை சென்று சேர்கிறதா என்பது குறித்து கண்காணிக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையின் சார்பாகவும் நடைபெற்று வர கூடிய பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் தீர்க்க முடியாத கோரிக்கைகளை கலெக்டர் மூலம் என்னிடம் வழங்கும் பட்சத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் கவனத்திற்கு ெகாண்டு சென்று அதற்கான தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு அறிவித்து தற்போது வரை துவக்கப்படாத பணிகளை துவங்கி தரமாக மேற்கொள்ள வேண்டும். தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் நாகபுஷ்பராணி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி,மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜோதி லட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, தாட்கோ பொது மேலாளர் சக்திவேல்,பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திலகவதி, கால்நடைத்துறை துணை இயக்குநர் திருமூலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்க்க உரிய நடவடிக்கை appeared first on Dinakaran.