*வறட்சியில் இருந்து காப்பாற்ற மழை பெய்தால் நல்லது
செம்பனார்கோவில் : தரங்கம்பாடியில் வெயில் அதிகரிப்பால் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. நிலக்கடலை செடிகளை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து, பயறு வகைகள், செங்கரும்பு, சீனிக்கரும்பு, வாழை, நிலக்கடலை, எள், சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, கேழ்வரகு சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளான காழியப்பநல்லூர், ஆணைக்கோவில், பத்துக்கட்டு, சிங்கானோடை பகுதிகளில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். இதில் சிங்கானோடை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில தினங்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழை பெய்யாததால் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் கடந்த சில கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நிலக்கடலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சித்திரை, வைகாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பாண்டு புரட்டாசி மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் நிலக்கடலை செடிகள் தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கி வருகிறது. நிலக்கடலை செடிகளை காப்பாற்ற நிலத்தடி நீரை பயன்படுத்தி தெளிப்பான் மூலம் தண்ணீரை பாய்ச்சி வருகிறோம். இருப்பினும் வெயில் கடுமையாக இருப்பதால் பூக்கள் கருகி மகசூல் குறையும் நிலை ஏற்படும். இதனால் போதிய லாபம் கிடைக்காது.
மேலும் மதுரை, சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கடலை மிட்டாய், சாக்லெட் மற்றும் ஆயில் மில் உரிமையாளர்கள், வியாபாரிகள் நிலக்கடலை கொள்முதல் செய்ய வருகின்றனர்.ஆனால் அவர்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையிலும் நிலக்கடலை சாகுபடியை நம்பியுள்ளோம். நிலக்கடலை செடிகளை வறட்சியிலிருந்து காப்பாற்றுவதற்கு மழை பெய்தால் நல்லது. வருணபகவான் கருணை காட்ட வேண்டும் என்றனர்.
The post வெயிலின் தாக்கத்தால் கருகும் அபாயம் நிலக்கடலை செடிகளுக்கு சொட்டுநீர் appeared first on Dinakaran.