மன்னார்குடி: வன உயிரினங்கள் யோககலைகளின் பிறப்பிடமாக கருதப்படுகின்றன, அதிலும் குறிப்பாக, ஆதிகாலத்தில் மனிதன் தனக்கு தேவையான யோக கலைகளை யானைகளிடமிருந்தே அறிந்து கொண்டான் என்ற கருத்தும் நீண்ட காலமாக நிலவி வருகிறது. குறிப்பாக, யானைகளின் உடல் அசைவுகள் பல சமயங்களில் மிகவும் நேர்த்தியான யோகாசன முறையில் இருக்கும். மனிதர்கள் இன்றைக்கு செய்யக் கூடிய பல யோகாசன அமைப்புகளை கோயில் யானைகளிடம் பார்க்கலாம். இதுகுறித்து யானை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகணேசன் கூறியது: தமிழ்நாட்டில் கோயில்கள், ஆதினங்கள், மடங்கள் மற்றும் தனியார்கள் வசம் உள்ள யானைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு வளர்ப்பு யானைகள் மற்றும் மேலாண்மை சட்டம் 2011 அடிப்படையில் வளர்க்கப்பட்டு வருகிறது.
யானைகள் பொதுவாக 40 வகையான கட்டளைகளை ஏற்கும். அதில், யானைகளை கட்டுப்படுத்தும் கட்டளைப்பயிற்சி உள்பட தேவையான அனைத்து பயிற்சிகளும் பாகன்கள் மூலம் தினந்தோறும் அளிக்கப்படுகிறது. யானைகள் உடல் அசைவுகள் மூலம் தனது கால் பகுதிகள், கால் பாதங்கள், தும்பிக்கை, வயிற்றுப் பகுதிகள், மார்பகங்கள் போன்றவைக்கு வலிமை சேர்த்து கொள்ளும். யானைகள் அவைகளின் உடல் எடைக்கு ஏற்ப அனைத்து உடல் அங்கங்களையும் பேணி காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருக்கும்.
யானைகளை பராமரிக்கும் பாகர்கள் மற்றும் உதவிப்பாகர்கள் தினந்தோறும் யானைகள் நடைப்பயிற்சி செய்யும் சமயத்தில் அதன் அசைவுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து உரிய பயிற்சிகளை அளிப்பதன் மூலம் பல அபூர்வ யோக கலைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வர முடியும். இதன் மூலம் யானைகளைப் பற்றிய விஞ்ஞானம் மேலும் விழிப்புணர்வு உண்டாகும்.
பாகர்கள் யானைகளுக்கு வழங்கக்கூடிய பயிற்சிகளை தத்துருவமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து யானைகளின் மேலாண்மை திட்டத்திற்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்றார்.
The post யோக கலைகளின் முன்னோடி யானை: பாகன் விளக்கம் appeared first on Dinakaran.