திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் நவம்பர் 2ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்க உள்ள நிலையில், யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியை திறக்க ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மட்டுமே அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. ஆன்மீகத்தையும், சுற்றுலாவையும் ஒருங்கே எண்ணியே இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் விடுதிகளில் தங்கியிருந்து கடலழகை ரசித்து அதிகாலையில் புனிதநீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காகவே கோயில் வளாகத்தை சுற்றி குறைந்த வாடகையுடன் கூடிய தங்கும் விடுதிகள், குடில்கள் இருந்தன.
கடந்த 2017 டிசம்பர் 14ம் தேதி கிரிப்பிரகார மண்டபத்தின் மேற்கூரை பகுதி, வடக்குவாசல் அருகே உடைந்து விழுந்தது. இச்சம்பவத்தையடுத்து கிரிப்பிரகாரம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. மேலும் அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் குழுவினர் கோயில் வளாகத்தில் உள்ள விடுதிகள் மற்றும் கட்டிடங்களின் நிலைத்தன்மையை முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் அறநிலையத்துறை உத்தரவின் பேரில், பக்தர்கள் தங்கும் விடுதிகளான திருக்கோயில் வளாகத்தில் இருந்த ஜெயந்திநாதர் விடுதி, வேலவன் விடுதி, செந்திலாண்டவர் விடுதி அறைகள் மற்றும் குடில்கள் அகற்றப்பட்டன.
தற்போது திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு நாழிக்கிணறு பேருந்து நிலையம் அருகே 24 அறைகள் கொண்ட செந்தூர் முருகன் விடுதியும், குளிர்சாதன வசதியுடன் 14 அறைகள் கொண்ட கந்தன் விடுதி மற்றும் 5 அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகையும் பக்தர்கள் தங்கும் விடுதிகளாக உள்ளன. இதனால் வார விடுமுறை நாட்கள், திருவிழா காலங்களில் திருச்செந்தூர் வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் தனியார் விடுதிகளையே நாட வேண்டிய சூழல் உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்காக விடுதி வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டில் அப்போதைய தமிழக அரசு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பக்தர்கள் தங்குவதற்காக ரூ.33 கோடியில் யாத்ரி நிவாஸ் விடுதிகள் கட்டப்படுமென அறிவித்தது. 2019ம் ஆண்டுக்குள் கோயில் தெற்கு மற்றும் வடக்கு டோல்கேட் அருகில் தங்கும் விடுதிகள் கட்டி திறக்கப்படும் என்றும் தெரிவித்தது. ஆனால் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள், 2020ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது.
இதனிடையே 2021ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் நேரடி பார்வையில் யாத்ரி நிவாஸ் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இங்கு பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் தனியார் விடுதிகளுக்கு இணையாக நவீன வசதியுடனும், டார்மென்டரி ஹால் போன்றவைகளும் இடம்பெற்றுள்ளன. முதலில் அனுமதிக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் கடந்தாண்டு கூடுதலாக ரூ.19 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் வேகமாக நடந்துள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் 2 பகுதிகளாக கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், மரக்கட்டில்கள், கழிப்பறையுடன் கூடிய இரு படுக்கை கொண்ட 100 அறைகள், 10 மற்றும் 6 படுக்கை கொண்ட 28 டார்மென்டரி ஹால்கள் (பெரிய அளவிலான தங்குமிடம்) மற்றும் 20 குடில்களும் கட்டப்பட்டு உள்ளது. பக்தர்களுக்காக உணவகம், ஜெனரேட்டர் மற்றும் மூத்த குடிமக்கள் வசதிக்காக லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கலாம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற விழாக்களுள் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா, இந்தாண்டு வரும் நவம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நவம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. கந்தசஷ்டி என்றாலே திருச்செந்தூரில் கடல் அலையா? பக்தர்கள் தலையா? என்று சொல்லும் அளவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்வர்.
தற்போது கோயிலில் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருவதால், பக்தர்கள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஓரிரு வாரங்களில் யாத்ரி நிவாஸ் விடுதியை திறப்பதற்காக அறநிலையத்துறையும், அரசும் முழு வீச்சில் ஆயத்தப் பணிகளை செய்து வருகிறது. அறநிலையத்துறை முதன்மை பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர், திருச்செந்தூர் கோயில் யாத்ரி நிவாஸ் விடுதியில் பூர்வாங்க நிறைவு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அறநிலையத்துறையின் ஆய்வு முடிந்துள்ளதால் முதல்வர் உத்தரவை பெற்று யாத்ரி நிவாஸ் விரைவில் திறக்கப்பட உள்ளதாக திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி திறக்க ஆயத்தப் பணி தீவிரம்: அறநிலையத்துறை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணிப்பு appeared first on Dinakaran.