சென்னை: சிறுவனை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திரைப்பட பின்னணி பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னணி பாடகர் மனோவின் மகன்களான ஷாகிர், ரபிக் ஆகியோர் கடந்த 10ம் தேதி இரவு தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கும், அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, மனோவின் மகன்கள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ், தர்மா ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று பாடகர் மனோவின் மகன்களை மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டுக்கட்டை, கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தலைமறைவான மகன்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
The post சிறுவர்களை தாக்கியதாக பதிவான வழக்கு; பின்னணி பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.