திருமலை: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்ேபாது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் கடந்த 5 நாட்களாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல கி.மீ தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஏழுமலையானுக்கு விசேஷ நாட்களில் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் வெள்ளமாகவே உள்ளது. புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்றே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக நேற்றுமுன்தினம் முதல் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் கோயில் வளாகங்களில் பக்தர்கள் இரவு தங்கி இருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். காலை 8 மணி நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 16 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.
The post புரட்டாசி முதல் சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திரண்ட பக்தர்கள் appeared first on Dinakaran.