×
Saravana Stores

ஏழுமலையான் நெய்வேத்தியத்திற்கு வந்த நெய்யில் கலப்படம்; கலியுக வைகுண்டத்திற்குள் நுழைந்த மீன், பன்றி, மாட்டின் கொழுப்புகள்: சர்ச்சைக்குள்ளான திருப்பதி லட்டு விவகாரம்

திருமலை: கலியுக வைகுண்டமாக விளங்கும் திருப்பதியில் ஏழுமலையானுக்கு படைக்கும் நெய்வேத்தியம் மற்றும் லட்டு பிரசாதத்துக்கான நெய்யில் மீன், பன்றி, மாட்டின் கொழுப்புகள் கலந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தோஷ நிவர்த்தி பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் கலியுக வைகுண்டமாக விளங்கி வருகிறது. இதில் திருப்பதி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஏழுமலையானின் லட்டு பிரசாதம் தான். தினமும் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நண்பர்கள், சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களுக்கும் கூடுதலாக லட்டு பிரசாதம் வாங்கி செல்கின்றனர். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினந்தோறும் 3.5 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. இதில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க கூடிய நிலையில், கூடுதல் லட்டு ஒன்று ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு மாதந்தோறும் 1 கோடிக்கு மேல் லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. தேவஸ்தான நிர்வாகம் லட்டு பிரசாதம், சுவாமிக்கு படைக்கும் நெய்வேத்தியம், திருச்சானூர் கோயிலுக்கு பிரசாதம் என ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி ஆண்டுக்கு ரூ.260 கோடிக்கு மேல் நெய் கொள்முதல் செய்யப்பட்டு பிரசாதம் தயார் செய்யப்படுகிறது. இந்த நெய் கொள்முதல் டெண்டர் விடப்பட்டு தேவஸ்தான நிபந்தனைக்கு உட்பட்டு தர முன்வரும் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு 5 நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பக்தர்களிடம் இருந்து லட்டு பிரசாதம் தரம், சுவை இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தில் புதிதாக பொறுப்பேற்ற செயல் அதிகாரி ஷியாமளா ராவ் லட்டு பிரசாதம் தரம் உயர்த்துவதற்காக கமிட்டி ஏற்பாடு செய்தார். இந்த கமிட்டியினர் லட்டு பிரசாதம் தரம் உயர்த்த நெய் தரமாக இருந்தால் மட்டுமே முடியும் என தெரிவித்தனர். இதனை அடுத்து நெய் வினியோகம் செய்யும் நிறுவனத்தினரை அழைத்து தரமற்ற நெய் விநியோகம் செய்தால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் ஒப்பந்தம் பெற்ற தமிழ்நாட்டில் திண்டுகல்லை சேர்ந்த ஏ.ஆர்.டைரி புட் புராடக்ட்ஸ் நிறுவனத்தினர் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தேவஸ்தானத்திற்கு 6 டேங்கர் நெய் அனுப்பி வைத்தனர். இந்த நெய் லட்டு பிரசாதம் ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நைவேத்தியத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்து வந்த ஐந்து நிறுவனங்களின் நெய்யை தேவஸ்தான அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் தேவஸ்தான எச்சரிக்கையை தொடர்ந்து 4 நிறுவனங்கள் தரமான நெய் சப்ளை செய்து வருவதும், திண்டுக்கல்லை சேர்ந்த நிறுவனம் மட்டும் தரமற்ற நெய் அனுப்பியதும் தெரியவந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜூலை 17ம் தேதி மற்றும் அதன் பிறகு 4 டேங்கர் லாரிகளில் வந்த நெய்யை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் என்.டி.டி.பி ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகள் ஜூலை 23ம் தேதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டது. இதில் மீன் எண்ணெய், பன்றி, மாட்டுக் கொழுப்பு என நெய்யில் பல்வேறு கலப்படம் செய்திருப்பது உறுதியானது.

தொடர்ந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 100 நிறைவு விழாவில் பேசும்போது, கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல், முறைகேடுகள் செய்திருப்பதோடு, திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயார் செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதனால் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தேவஸ்தான செயல் அதிகாரியும் உறுதி செய்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன், ‘முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது 100 நாள் ஆட்சியில் மக்களுக்கு என்ன சாதனை செய்தார் என்று கூற முடியாமல், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அதனை திசை திருப்பும் விதமாக புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறார்’ என கூறினார். கடவுளை நேரில் பார்ப்பதாகவே கருதும் பல கோடி பக்தர்கள் வாங்கிச் செல்லும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்திருப்பது அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல் தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டோம் என முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், அவரது மகனும் அமைச்சருமான நாரா லோகேஷூம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி திருப்பதி லட்டு நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நெய்யில் கலப்படம் இருப்பதை கண்டறிந்து அந்த நிறுவனம் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டிருப்பதோடு, தரமான நெய்யை கொள்முதல் செய்து பிரசாதத்துக்கு பயன்படுத்துவதாகவும், லட்டின் புனித தன்மை மீட்கப்பட்டிருப்பதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் கலியுக வைகுண்டமாக கருதப்படும் திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்கு பயன்படுத்தும் நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பதால் தோஷ நிவர்த்தி பரிகார பூஜைகள் செய்வது அவசியம் என ஆகமஆலோசகர்கள், அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி தோஷ நிவர்த்தி பரிகார பூஜைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

மதகுருக்கள், மத நிபுணர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் குறித்த புகாரை அடுத்து எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கை குறித்து, மதகுருக்கள், சாதுக்கள், சாமியார்கள், இந்து மத நிபுணர்களுடன் அரசு ஆலோசனை நடத்தும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். சனாதன தர்ம (இந்து மதம்) நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, சுத்திகரிப்பு சடங்கு எப்படி செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

லட்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள்

கடந்த 2001ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டத்தின்படி 5 ஆயிரத்து 100 லட்டுகள் தயார் செய்வதற்காக 185 கிலோ கடலை மாவு, 160 கிலோ நெய், 30 கிலோ முந்திரி, 6 கிலோ ஏலக்காய், 400 கிலோ சர்க்கரை, 8 கிலோ கற்கண்டு மற்றும் 16 கிலோ உலர்ந்த திராட்சை ஆகியவை மணம் மற்றும் சுவை மிக்க லட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

பிரமோற்சவத்துக்கு 7 லட்சம் லட்டுகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சம்பங்கி பிரகாரம் எனும் இடத்தில் லட்டுகள் தயாரிக்கும் பொட்டு (மடப்பள்ளி) உள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 3.50 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்படும் நிலையில், பிரமோற்சவம் மற்றும் விழாக்காலங்களில் 7 லட்சம் லட்டுகள் வரை நிலுவை வைத்து தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது.

The post ஏழுமலையான் நெய்வேத்தியத்திற்கு வந்த நெய்யில் கலப்படம்; கலியுக வைகுண்டத்திற்குள் நுழைந்த மீன், பன்றி, மாட்டின் கொழுப்புகள்: சர்ச்சைக்குள்ளான திருப்பதி லட்டு விவகாரம் appeared first on Dinakaran.

Tags : Etummalayan Neivetiyam ,Kaliyuga ,Tirumala ,Tirupati ,Dosha Nivarthi Pujas ,Neivetiyam ,Lattu Prasad ,Seven Hills ,Yeumalayan ,Neivediyam ,Kaliyuga Vaikunda ,
× RELATED கலியுக வரதராசப் பெருமாள் கோயில்...