டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த ஜூலை 5ம் தேதி கொடூரமாக அவரது வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் தேசிய கட்சியின் மாநில தலைவர் என்பதால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தொடர் கைதுகள் நடைபெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வழக்கில் 27 பேர் இதுவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை விதியோகம் செய்த ரவுடி புதூர் அப்புவை தனிப்படையினர் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
மறைந்த ரவுடி சிவக்குமாரின் கூட்டாளியாக புதூர் அப்பு இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய ரவுடி புதூர் அப்பு டெல்லியில் அதிரடி கைது appeared first on Dinakaran.