திரைக்குப் பின்னால் உள்ள ஒரு கன்னிப் பெண்ணைவிட அதிகம் நாணம் கொண்டவர்களாய் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். அவர் யாரையும் கடிந்து பேசியதில்லை. தனிப்பட்ட முறையில் தமக்குத் துன்பம் இழைத்த யாரையும் பழி வாங்கியதும் இல்லை.அவரிடம் பத்து ஆண்டுகள் பணியாளராக வேலை பார்த்த அனஸ் எனும் நபித்தோழர் கூறுகிறார்: ‘‘அவர் ஒருமுறைகூட என்னைப் பார்த்து ‘சீ’ என்று கூறியதில்லை.’’குழந்தைகள் என்றால் பெருமானாருக்குக் கொள்ளை ஆசை. வழியில் குழந்தைகளைக்கண்டால் முந்திக்கொண்டு சலாம் சொல்வதுடன் அவர்களின் தலைகளையும் அன்புடன் தடவிக் கொடுப்பார். தம்முடைய வாழ்நாளில் அவர்கள் யாரையும் கைநீட்டி அடித்ததில்லை. பிறர் மீது கோபம் வரும்போதுகூட ‘இவருக்கு என்ன ஆயிற்று? இவருடைய மூக்கு மண்ணாகட்டும்’ என்ற அளவில்தான் கண்டிப்பார்.ஒருமுறை எதிரிகளால் கடுமையான துன்பங்கள் ஏற்பட்டபோது, நபித் தோழர்கள் அவரிடம், ‘‘இறைத்தூதர் அவர்களே, இந்த எதிரிகளை சபித்து விடுங்கள்’’ என்றார்.உடனே நபியவர்கள், ‘‘இறைவன் பிறரை சபிப்பதற்காக என்னை அனுப்பவில்லை. மாறாக, எல்லோருக்கும் அருட்கொடையாகவே என்னை அனுப்பியுள்ளான்’’ என்று பதில் அளித்தார்.
ஒருமுறை யூதர் ஒருவருடைய சவ ஊர்வலம் சென்றது. அந்தச் சவ ஊர்வலம் தம்மைக் கடந்து சென்றபோது நபிகளார் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.இதைக் கண்ட தோழர்கள், ‘‘இறைத்தூதரே, அது ஒரு யூதனின் சவ ஊர்வலமாயிற்றே!’’ என்றனர்.‘‘இருக்கட்டுமே. அவரையும் இறைவன்தானே படைத்தான்!’’ என்று பதில் அளித்தார் அண்ணலார்.அண்ணல் நபி(ஸல்) அவர்களின் இந்தப் பண்பு நலன்களை குர் ஆனில் இறைவனே பின்வருமாறு சிறப்பித்துக் கூறுகிறான்: ‘‘திண்ணமாக, நற்பண்புகளின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்.’’ குர்ஆன் (68:4)இறைத்தூதரின் அந்த உயர் பண்புகளை நம்முடைய நடைமுறை வாழ்விலும் நாம் பின்பற்றுவோமாக.
– சிராஜுல் ஹஸன்
The post நான் சபிப்பதற்கு வந்தவனல்லன்! appeared first on Dinakaran.