சென்னை: வீட்டு பணியாளரை தாக்கிய வழக்கில் நடிகை பார்வதி நாயர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங்க் சாலை பகுதியில் வசித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், மற்றும் நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், விஜய்யின் கோட் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு இவரது வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், ஐஃபோன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில், எனது வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மீது சந்தேகம் இருக்கிறது’ என்று கூறியிருந்தார். இதையடுத்து சுபாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்பாக சுபாஷ் சந்திர போஸ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்தபோது என்னை துன்புறுத்தியதாகவும், அபாண்டமாக திருட்டு பட்டம் கட்டி, தான் தங்கியிருந்த அறையில் வைத்து தாக்கியதாகவும், தன்னை நடிகை பார்வதி நாயர், அயலான் பட தயாரிப்பாளர் உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், நடிகை பார்வதி நாயர் மீண்டும் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘எனது புகழை கெடுக்கும் வகையில் என்னை பற்றி சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. எனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வருகிறது. இதற்கு காரணம் சுபாஷ்சந்திரபோஸ்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து மீண்டும் 2வது முறையாக சுபாஷ் சந்திர போஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சுபாஷ் சந்திரபோஸ் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், உடனடியாக தவறான வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ், மீண்டும் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நடிகை பார்வதி நாயர், கொடப்பாடி ராஜேஷ் மற்றும் 6 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டு பணியாளரை தாக்கியது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.