விழுப்புரம், செப். 21: விழுப்புரத்தில் போலீசார் விதித்த நிபந்தனைகளை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதற்காக தாலுகா காவல் நிலையத்தில் அனுமதி கோரியிருந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு, அதிகளவு கூட்டம் வருவதால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போதுமான இடவசதியில்லாததால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவினர் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அப்போது காவல்துறை பிறப்பிக்கும் நிபந்தனைகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடத்தி கொள்ள அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி காவல்துறையினர் 9 நிபந்தனைகளை விதித்திருந்தது.
அரசு வேலை நாள் என்பதாலும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் முக்கியஅரசு அலுவலகம், நீதிமன்றம், பேருந்துநிலையம் உள்ளதால் பொதுமக்கள் அதிகளவு வந்துசெல்லும் இடம் என்பதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறோ, தடை ஏற்படுத்தகூடாது. 200 நபர்களுக்கு மேல் நிற்க போதிய இடவசதியில்லாததால் அதற்கு குறைவான கட்சியினரை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். கட்சியினர் வரும் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நகராட்சி திடலில் நிறுத்த வேண்டும். பாக்ஸ்வடிவ ஒலிபெருக்கி அமைக்க வேண்டும். கட்சி பதாகைகள், கொடிகள் வைக்கக்கூடாது. தனிப்பட்ட நபர்களையோ, சர்ச்சைக்குரிய கருத்துக்கள், மனதை புன்படுத்தும் விதத்திலும் அறுவறுக்கதக்க வகையில் பேசவோ, கோஷங்களை எழுப்பக்கூடாது. காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கான இடத்தில் சாலையின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பொது, தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாதவகையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், மீறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்திருந்தனர்.இதனைதொடர்ந்து நேற்று காலை விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிலையில் அதிகளவிலான கூட்டம் வந்ததால் நிற்பதற்கு இடமில்லாமல் சாலையில் ஆக்கிரமித்து கொண்டனர். இதனால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லவழியின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் புதிய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் சிக்னல் வழியாக இயக்கப்பட்டன. அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பிற்பகல் 1மணிவரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனிடையே ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை விதித்த நிபந்தனைகளையும் பெரும்பாலும் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
The post விழுப்புரத்தில் நிபந்தனைகளை மீறி அதிமுக ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.