- யூனியன் அரசு
- ஆந்திரப் பிரதேசம்
- தலைமை அமைச்சர்கள்
- திருமலா
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- ஆந்திரப் பிரதேசம் அரசு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாட்டு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் பிரசாத லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் தேசிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர அரசிடம் ஒன்றிய அரசு அறிக்கை கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும்.
ஆனால், ஆந்திராவில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில், லட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பசு நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாகமுதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த புதன்கிழமை குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை மாதம் லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குஜராத் ஆய்வு நிறுவனத்திற்கு நெய் சாம்பிள்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. அதில், ஒரு நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் 37 சதவீதம் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வு அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி நெய்யில் சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ், ராப்சீட், ஆளி விதை, பருத்தி விதை, மீன் எண்ணெய், பாமாயில் மற்றும் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பசு நெய்யில் மீன் மற்றும் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேசிய விவகாரமாக உருவெடுத்த நிலையில், ஒன்றிய அரசும் இதில் நேரடியாக தலையிட்டுள்ளது.
இது பற்றி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மிருக கொழுப்புகள், எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தரும்படி ஆந்திரா மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் ஒன்றிய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். ஒன்றிய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘‘ஆந்திரா முதல்வர் வெளியிட்டுள்ள தகவல் கவலையளிக்கிறது.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார். இந்த நிலையில், கலப்பட பசு நெய்யை சப்ளை செய்தது தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் இயங்கும் ஏ.ஆர்.டைரி புட் நிறுவனம் என்ற தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் நேற்று வெளியிட்டார். திண்டுக்கல் நிறுவனத்தில் இருந்து ஜூலை மாதம் வந்த 10 டேங்கர் நெய்யில் 6 லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும் மீதமுள்ள 4 டேங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அமராவதி தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆய்வு நடத்தினார். இதில் தலைமைச் செயலாளர் நிரப்குமார் பிரசாத், அமைச்சர்கள் ஆனம் ரமணராய ரெட்டி, நிம்மலா ராமாநாயுடு, அனானி சத்யபிரசாத், கொல்லு ரவீந்திரா, கொலுசு பார்த்த சாரதி மற்றும் உயர் அதிகாரிகள் திருமலை விவகாரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், கடந்த அரசின் லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்து இன்று(நேற்று) மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
திருமலையின் புனிதத்தைப் பாதுகாப்பது தொடர்பாக ஆகம, ஆன்மீக சான்றோர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.பக்தர்களின் நம்பிக்கையும், கோயிலின் பாரம்பரியமும் பாதுகாக்கப்படும். ஏழுமலையான் கோயிலின் மாண்பு மற்றும் பக்தர்களின் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனமுதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து இந்த கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இடையே வார்த்தை போர் தொடங்கி உள்ளது.
பிரகாசம் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, நெய் கலப்பட விவகாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின்போது ஏழுமலையானுக்கு படைக்கப்படும் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை கேட்டு பக்தர்கள் கடும் மனவேதனையில் உள்ளனர். மலிவு விலையில் கலப்பட நெய் வாங்கி, ஏழுமலையான் கோயிலின் புனிததன்மையை கெடுத்துவிட்டனர். மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தவர்களை தண்டிக்காமல் விட்டுவிட முடியாது.
இப்போது, நெய் சப்ளை செய்யும் நிறுவனத்தை மாற்றிவிட்டோம். கர்நாடகாவின் நந்தினி நெய் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். அதே நேரத்தில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆந்திராவில் தேர்தல் முடிவு ஜூன் 4ம் தேதி வந்தது. ஜூலை 12ம் தேதி முதல் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இந்நிலையில் ஜூலை 17ம் தேதி டேங்கரில் வந்த நெய் தேவஸ்தானமே மூன்று கட்ட சோதனை மேற்கொண்டு அதில் திருப்தி இல்லாததால் அதனை என்.டி.டி.பி. (நேஷனல் டைரி டெவலப்மெண்ட் போர்டு ) சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த அறிக்கை ஜூலை 23ம் தேதி வந்தது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசின் 100 நாட்கள் சாதனை என்று கூற ஒன்றும் இல்லை. மேலும் தேர்தலில் கொடுத்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதி என்ன ஆனது என மக்கள் கேட்க தொடங்கி உள்ளனர். எனவே அதனை திசை திருப்பவே நெய் குறித்த ஆய்வறிக்கையை 2 மாதங்களுக்கு பிறகு, தற்போது சந்திரபாபுவின் கேவலமான அரசியலால் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு தனது தோல்விகளை மறைக்க பொய்யான கதைகளை கூறி வருகிறார். நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறுகிறார். முதல்வராக இருப்பவர் இப்படி பேசுவது சரியா? கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தி அரசியல் ஆதாயம் பார்க்கிறார். லட்டு தயாரிக்கும் பொருள் வாங்கும் செயல்முறை பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் தேவஸ்தான கொள்கை முடிவின்படி பெறப்படுகிறது.
இதற்காக ஒப்பந்தம் பெறும் நிறுவனம் என்ஏபிஎல் சான்றிதழுடன் வர வேண்டும். அதன் பிறகு தேவஸ்தானத்தின் மூன்று கட்ட மாதிரிகளை எடுத்து சோதனை செய்கிறது. இந்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பெறப்படுகிறது. இந்த முழுக் கொள்கையும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசியலுக்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுபோன்று பொய் கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
* சனாதன தர்ம பாதுகாப்பு நலவாரியம் அமைக்கும் நேரம்
ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் நேற்றுமுன்தினம் இரவு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதைக் கண்டு நாம் அனைவரும் ஆழ்ந்த கலக்கமடைந்துள்ளோம். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். சாத்தியமான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது.
ஆனால், இது கோயில்களை இழிவுபடுத்துதல், நிலப்பிரச்னைகள் மற்றும் பிற இந்து தர்ம நடைமுறைகளை சுற்றியுள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள கோயில்கள் தொடர்பாக அனைத்து பிரச்னைகளையும் ஆராய தேசிய அளவில் `சனாதன தர்ம பாதுகாப்பு நல வாரியம்’ அமைக்கும் நேரம் வந்துவிட்டது.
கொள்கை வகுப்பாளர்கள், மத தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்த களங்களில் உள்ள அனைவராலும் தேசிய அளவில் ஒரு விவாதம் நடத்தவேண்டும். சனாதன தர்மத்தை எந்த வகையிலும் இழிவுபடுத்துவதற்கு விடக்கூடாது. அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
* புனிதம் காக்கப்பட வேண்டும் ராகுல்காந்தி
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் பிரசாதத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக வெளியான செய்திகள் கவலையளிக்கின்றன. இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்குரிய தெய்வம் பாலாஜி. இந்த பிரச்சினை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும். இது முழுமையாக கவனிக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
* உயர்நீதிமன்றத்தில் வழக்கு
திருப்பதியில் ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சியில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த கருத்து குறித்து, ஆந்திர உயர்நீதி மன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போதைய நீதிபதி அல்லது உயர்நீதிமன்றக் குழுவைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங் கட்சி வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இந்த மனுவை வரும் 25ம் தேதி விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
The post பன்றி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கலப்பு திருப்பதி லட்டு தேசிய பிரச்னையானது: அறிக்கை கேட்கிறது ஒன்றிய அரசு, ஆந்திர முன்னாள் இன்னாள் முதல்வர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு appeared first on Dinakaran.