×
Saravana Stores

ஃபுட் போட்டோகிராபிக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கு!

நன்றி குங்குமம் தோழி

எந்த ஒரு உணவாக இருந்தாலும் முதலில் கண்களால் சுவைக்க வேண்டும். அதன் பிறகுதான் நாவில் அதன் சுவையை உணர முடியும். கண்களால் உணவினை சுவைக்க வைக்க முக்கிய பங்கு அதனை புகைப்படம் பிடிக்கும் புகைப்பட கலைஞரையே சேரும். அப்படிப்பட்ட புகைப்படங்களைதான் எடுத்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஷர்மிளா. புகைப்படத்
துறையில் பலவகை இருந்தாலும் இவர் ஃபுட் போட்ேடாகிராபியினை தேர்வு செய்த காரணம், அதன் பயணம் குறித்து பகிர்ந்து கொண்டார். ‘‘சொந்த ஊர் ஈரோடு. திருமணமாகி சென்னையில் செட்டிலாயிட்டேன்.

வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், பேக்கிங் கற்றுக்ெகாண்டு செய்து வந்தேன். ஆனால் அதை பிசினசாக செய்யாமல், அதன் செய்முறைகளை என் பிளாக் பக்கத்தில் (blog) வெளியிட்டேன். பத்து வருடங்களுக்கு முன், இன்ஸ்டா கிடையாது. பிளாக் பக்கங்கள், முகநூல் மற்றும் யுடியூப்தான். ரெசிபிகளுடன் புகைப்படமும் பதிவு செய்ய வேண்டும் என்பதால் நானே என் செல்போனில் படம் பிடித்து பதிவு செய்தேன். இயற்கை வெளிச்சத்தில் என்னுடைய செல்போனில் படம் பிடித்தாலும் அதனை பார்க்கும் போது ஈர்க்கக்கூடியதாக இருந்தது. அதனால் புகைப்படம் எடுக்கும் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பினேன்.

யுடியூப்பில் DSLR ேகமராவில் எப்படி படம் பிடிக்கலாம் என்ற அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு DSLR கேமரா வாங்கி அதில் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். உணவுப் புகைப்படம் என்பதால் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்ட வேண்டும். அதற்கு பிளாஷ் மற்றும் ஷட்டர் ஸ்பீட் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் அது குறித்து சிறப்பு பயிற்சி மேற்கொண்டேன்.

என் பிளாக் பக்கத்தினைப் பார்த்து பல உணவு நிறுவனங்கள் அவர்களின் பிராண்ட் குறித்து என் பக்கத்தில் புரோமோஷன் செய்து தரச்சொல்லி கேட்டார்கள். நானும் அவர்களின் பொருட்களைக் கொண்டு என்ன உணவு சமைக்கலாம் என்று அதன் ரெசிபிக்கள் மற்றும் அதன் புகைப்படத்தினை பதிவு செய்து வந்தேன். நாளடைவில் அதே உணவை அவர்களின் இணையத்திலும் தங்களின் பொருட்களின் புகைப்படங்களை பதிவு செய்ய என்னிடம் வந்தார்கள்.

அவர்களின் பொருட்களையும் புகைப்படம் எடுத்து தரச் சொல்லிக் கேட்டார்கள். எனக்கு ஃபுட் போட்டோகிராபி மேல் விருப்பம் இருந்ததால் நானும் அதை என்னுடைய தொழிலாக செய்து வருகிறேன். இப்படித்தான் பேக்கிங்கில் ஆரம்பித்து தற்போது புகைப்பட கலைஞராக என் பயணம் மாறியது’’ என்றவர் ஃபுட் போட்டோகிராபி குறித்து விவரித்தார்.

‘‘ஒரு பிராண்டினை புரமோட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு புகைப்படம் அவசியம். வாடிக்கையாளர்கள் முதலில் உணவு சம்பந்தமான பொருட்கள் என்றால் அதன் புகைப்படத்தைப் பார்த்து தான் வாங்க முன்வருவார்கள். அவர்கள் கண்களை தூண்டுவது போல் புகைப்படம் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இயற்கை வெளிச்சத்தில்தான் நான் படம் பிடித்தேன். ஆனால் சில உணவுகளை அவ்வாறு படம் பிடிக்க முடியாது. நல்ல லைட்டிங் செட் செய்து படம் பிடித்தால்தான் அந்த உணவு பார்க்கும் போதே அழகாக இருக்கும்.

மேலும் ஒரு உணவின் சமைக்கும் முறையினை கதை வடிவத்தில் கொடுத்தால்தான் மக்களும் விரும்பி பார்ப்பார்கள். அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். உதாரணத்திற்கு சாம்பார் நாம் அன்றாடம் வீட்டில் செய்யும் உணவுதான். ஆனால் அதில் பயன்படுத்தப்படும் சாம்பார் பொடிதான் அதன் சுவையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதை மக்களிடம் புகைப்படம் மூலம் கொண்டு செல்ல சாம்பார் மட்டுமில்லாமல் அதற்கு தேவையான பருப்பு, தாளிப்பு பொருட்கள், மசாலாக்கள் அனைத்தும் நான் எடுக்கும் புகைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். அதுவே கிறிஸ்துமஸ் கேக் என்றால், கிறிஸ்துமஸ் லைட், பெல், கேப் போன்றவை இருக்கும்.

புகைப்பட துறை, ஒரு பெரிய கடல். அதில் உணவு சார்ந்த புகைப்படங்கள் என்பது தனி கலை. பொதுவாக ஒரு போர்ட்ரெயிட் படம் எடுக்கும் போது மேக்கப் போட்டு ஆர்டிஸ்ட் கேமரா முன் நிற்பார். நாம் அவரை அழகா புகைப்படம் எடுப்போம். ஆனால் உணவுப் பொறுத்தவரை அதை அழகாக எடுத்துக்காட்ட நாம் அதற்கு எக்ஸ்ட்ரா மேக்கப் போட வேண்டும். சிலர் பாரம்பரிய முறையை விரும்புவாங்க. அதற்கு உணவிற்கு அருகில் பித்தளை தூக்குச்சட்டி, கல்சட்டி போன்றவற்றை அமைத்து எடுப்பேன். இதுவே மார்டனாக வேண்டும் என்றால் கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்துவேன்.

அடுத்து அந்த உணவை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தூண்ட வேண்டும். அதற்கு பேக்ரவுண்ட் மட்டும் அலங்கரித்தால் போதாது. உணவிற்கும் சில மேக்கப் சாதனங்களை பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, சிக்கன் கிரேவி அல்லது மீன் ஃபிரை என்றால் அதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை கொண்டு அலங்கரித்தால் பார்க்க அழகாக இருக்கும். அதுவே சாம்பார் என்றால் அதன் மேல் எண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை கொண்டு தாளிதம் சேர்க்க வேண்டும். பேன் கேக்கில் தேன் வடிவது, கேக்கில் சாஸ் தெளிப்பது போன்ற புகைப்படங்களை ஆக்‌ஷன் படங்கள் என்று குறிப்பிடுவோம்’’ என்றவர், தன் எதிர்கால திட்டம் குறித்து விவரித்தார்.

‘‘ஃபுட் போட்டோகிராபியில் எனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் நோக்கம். அதற்காக மற்ற பிராஜக்ட்களை தவிர்க்க மாட்டேன். அந்த ஸ்டைல் புகைப்படங்கள் எடுத்தால்தான் ஒரு முழுமையான அனுபவம் கிடைக்கும். ஆனால் அதிலும் எனக்கு போர்ட்ரெயிட் படங்களாக இல்லாமல் வாட்ச் போன்று மற்ற பொருட்கள் சார்ந்து செய்ய விருப்பம். ஒரு வாட்ச் நிறுவனத்திற்காக தீம் முறையில் புகைப்படம் எடுத்து கொடுத்தேன். அது எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது.

புகைப்படத் துறையை பொறுத்தவரை பலர் வெட்டிங் மற்றும் போர்ட்ரெயிட் துறையினைதான் தேர்வு செய்றாங்க. ஃபுட் போட்டோகிராபியில் நல்ல எதிர்காலம் இருக்கு. தினமும் புது உணவகம், உணவுப் பொருட்கள் அறிமுகமாகிறது. பலர் வீட்டில் இருந்தபடியே குக்கீஸ், கேக் போன்றவற்றை சிறு தொழிலாக செய்றாங்க. அவர்களின் பொருட்களை மக்களிடம் விளம்பரம் செய்ய புகைப்படம் அவசியம் என்பதால் ஃபுட் போட்டோகிராபிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

அதனால் ஃபுட்போட்டோகிராபி குறித்து வர்க்‌ஷாப் மூலம் பயிற்சி அளித்து வருகிறேன். போட்டோகிராபியில் நாளுக்கு நாள் அதன் தொழில்நுட்பங்கள் மாறிவருகிறது. அதற்கு ஏற்ப நான் என்னை அப்கிரேட் செய்து கொண்டு இருக்கிறேன். தற்போது பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டாலும், அடுத்த கட்டமாக பெரிய பெரிய பிராண்ட்களுடன் வேலை பார்க்க வேண்டும்’’ என்றார் ஷர்மிளா.

தொகுப்பு: நிஷா

The post ஃபுட் போட்டோகிராபிக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கு! appeared first on Dinakaran.

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்