*விலை நிர்ணயம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
தென்காசி : குற்றாலத்தில் பல நூற்றாண்டுகளாக காய்ச்சப்பட்டு வரும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக விலை நிர்ணயம் செய்வது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். குற்றாலத்தில் வைணவ தலமாக இருந்த கோயில் அகத்தியரின் திருக்கரங்களால் குறுக குறுக என அழுத்தப்பட்டு, சிவாலயமாக மாற்றப்பட்ட பெருமைக்குரியது.
இக்கோயில் சைவ சமய பெரியோர், நாயன்மார்களால் பாடல் பெற்ற பழமை வாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலில் தலையில் அழுத்தப்பட்டு லிங்கமானதால் மூலவர் குற்றாலநாத சுவாமிக்கு ஏற்படும் தலைபாரத்தை நீக்க ஒவ்வொரு ஆண்டும் சந்தனாதி தைலம் காய்ச்சப்பட்டு சுவாமிக்கு சார்த்தப்படும். இந்தாண்டு மார்ச் மாதத்தில் பூஜைகளுடன் தைலம் காய்ச்சும் நிகழ்வு துவங்கியது.
48 வகையான மூலிகை பொருட்களுடன் அதற்கென உள்ள வெண்கல பானையில் வைத்து மூன்று மாதங்கள் அல்லது 100 நாட்கள் தொடர்ந்து தீ மூட்டப்பட்டு இந்த தைலம் காய்ச்சப்படும். அவ்வாறு காய்ச்சப்பட்ட தைலம் முழுமை அடைந்து விட்டதா என்பதை சோதிப்பதற்காக ஒரு திரியில் தைலத்தை நனைத்து தீ வைத்து சோதிப்பது வழக்கம். அவ்வாறு தீ வைக்கும் போது தண்ணீர் சத்து அதில் இருந்தால் சிறு, சிறு வெடிப்பு சத்தம் கேட்கும். எனவே தண்ணீர் சத்து முழுமையாக குறைவதற்காக மேலும் சில நாட்கள் அடுப்பில் தீ மூட்டி எரிக்கப்படுகிறது.
முழுமையான தைலம் கிடைக்கப்பெற்ற பிறகு இந்த தைலத்தை கொண்டு குற்றாலநாத சுவாமிக்கு தினமும் 100 மில்லி அளவிற்கு தலையில் வைத்து அபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அபிஷேகம் நடத்தப்பட்ட தைலம் அபிஷேகத்திற்குப் பிறகு வழித்து எடுக்கப்பட்டு பாட்டிலில் அடைத்து பக்தர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தாண்டு சந்தனாதி தைலம் காய்ச்சும் வைபவம் மார்ச் மாதம் துவங்கி மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்றது. தற்போது அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனாதி தைலமானது பக்தர்களுக்கு வழங்குவதற்காக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இந்த தைலத்தை பக்தர்களுக்கு விற்பனை செய்ய எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யலாம் என்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிற கோயில்களுக்கு தகவல்
தமிழகத்தில் உள்ள கோயில்களில் குற்றாலநாத சுவாமி கோயிலில் தான் பல நூற்றாண்டுகளாக சந்தனாதி தைலம் முறையாக காய்ச்சப்பட்டு, அதனைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நெல்லையப்பர் கோயிலிலும் இதுபோன்று சந்தனாதி தைலம் காய்ச்சப்படுகிறது. இதற்கான வழிமுறைகளை குற்றாலநாதர் கோயில் நிர்வாகத்தை அணுகி அவர்கள் விவரங்களை சேகரித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
விலை நிர்ணயம் செய்வது எப்படி?
சந்தனாதி தைலம் காய்ச்சுவதற்கு எவ்வளவு செலவானது என்பதை கணக்கில் கொண்டும், எத்தனை லிட்டர் தைலம் கிடைத்துள்ளது என்பதை கணக்கில் எடுத்து, அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு எவ்வளவு தைலம் கிடைக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை எல்லாம் கணக்கிட்டு 100 மில்லி பாட்டிலுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று அறநிலையத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
உடல் வெப்பத்தை தணிக்கும்
தமிழகத்தின் ஒரு சில கோயில்களில் தான் இத்தகைய சந்தனாதி தைலம் முறையாக காய்ச்சப்படுகிறது. வெளிச்சந்தையில் சந்தனாதி தைலம் மிகவும் பிரபலமானது. எனினும் நவீன காலத்தில் அவற்றில் சில கெமிக்கல் மற்றும் வாசனை பொருட்களை கலந்து போலி தைலமும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இத்தகைய சந்தனாதி தைலத்தை தேய்த்து குளித்தால் உடல் வெப்பத்தை தணிப்பதற்காகவும், நாள்பட்ட தலைவலி, கண்ணில் நீர் வடிதல், தசை பிடிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.
ஏராள மூலிகைகள்
தண்ணீர், நல்லெண்ணெய், இளநீர், பால் இவற்றுடன் வெள்ளைச்சந்தனம், செஞ்சந்தனம், மஞ்சள் சந்தனம், காலீயகம், அகில்கட்டை, காரகில் கட்டை, தேவதாரு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, பதிமுகம், தூணிகம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கஸ்தூரி வெண்டைக்காய் விதை, குங்குமப்பூ, இலவங்கம், சிற்றேலம், பேரேலம், தக்கோலம், லவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, குருவேர், விளாமிச்சவேர், ஜாதிமல்லி, சடாமஞ்சில், உஷ்ணா (கல்பாசி), கோரைக்கிழங்கு, அரேணுகம், ஞாழல்பூ, கந்தபெரோஜா, சுத்தி செய்த குக்குலு, கொம்பரக்கு, நகம், வெள்ளைக் குங்கிலியம், காட்டாத்திப்பூ, கஸ்தூரி மஞ்சள், மஞ்சட்டி, கிரந்திதகரம், தேன்மெழுகு, காட்டு நெல்லி விதை, முந்திரி கொட்டை, அதிமதுரம், வெட்டி வேர், நாகப்பூ, மகிழம்பூ, கடுக்காய், திப்பிலி, வேப்பம்பட்டை, ஆலவேர் ஆகியவற்றை சேர்த்து சந்தனாதி தைலம் காய்ச்சப்படுகிறது.
The post குற்றாலம் கோயிலில் 48 வகை மூலிகைகளுடன் காய்ச்சப்படும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு appeared first on Dinakaran.