பாலக்காடு, செப். 19: ஓணம் திருவிழாவையொட்டி வாழப்பிலாத்து பகவதி கோயில் அருகே கயிறு இழுக்கும் (வடம் வலி) போட்டியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் 3 பேர் தாக்குதலில் காயமடைந்தனர். ஓணம் திருவிழாவையொட்டி கயிறு இழுக்கும் போட்டி திருச்சூர் அருகே வாழப்பிலாத்து கோயில் பகுதியில் நடைபெற்றது. இதில் 2 தரப்பினரிடையே போட்டியில் தவறுகளை சுட்டிக்காட்டி மோதல் ஏற்பட்டது. அப்போது திடீரென காக்கச்சேரியை சேர்ந்த ஷேரெயஸ் (23), அக்ஷய் (19) ஆகியோர் சேர்ந்து எளவள்ளியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவரின் மகன் ஹர்ஷித் (24) என்பவரை கத்தியால் குத்தினர்.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், இந்த தகராறில் பரங்கநாட்டை சேர்ந்த உதயனின் மகன் ஆயுஷ் (17), ராஜனின் மகன் விமல் (23), ஆதித்யன் (20) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிற்றாட்டுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கத்திக்குத்து காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹர்ஷித் உட்பட 4 பேரை மீட்டு திருச்சூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஷேரெயஸ், அக்ஷய் ஆகிய 2 பேரை கைது செய்து திருச்சூர் சிற்றாட்டுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருச்சூர் அருகே கயிறு இழுக்கும் போட்டியில் மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.