திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து, 2 டன் 150 கிலோ அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, காவல்துறை தலைமை இயக்குநர் வி.சீமா அகர்வால், காவல்துறை தலைவர் கே.ஜோஷி நிர்மல்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில், காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் மேற்பார்வையில், சென்னை சரக டிஎஸ்பி (பொறுப்பு) ஆர்.சரவணகுமார் மேற்பார்வையில், திருவள்ளூர் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் இந்திராணி, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 3ம் நடைமேடையில் மூட்டைகளுடன் நின்றுகொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்களிடம் சுமார் 1 டன் 100 கிலோ தமிழக பொது ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரேசன் அரிசியை கடத்தி வந்த பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார்(50), கோவிந்த ராஜ்(51) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். பின்னர், போலீசார் பறிமுதல் செய்த அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதேபோல், இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரா.சசிகுமார் மற்றும் போலீசார் பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த பைக்கினை சோதனை செய்ததில், சுமார் 150 கிலோ மற்றும் மறைவாக பதுக்கி வைத்திருந்த சுமார் 900 கிலோ என 1 டன் 50 கிலோ ரேசன் அரிசியை கடத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து ரேசன் அரிசியை கடத்தி வந்த ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஆனந்தராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன்(43) என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்குபதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட 1,050 கிலோ ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
The post திருவள்ளூரில் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது: 2 டன் 150 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.