×
Saravana Stores

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

மேட்டுப்பாளையம்: கோவை, மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் உலா வந்து பொதுமக்களை அச்சப்படுத்திய 15 அடி நீள முதலை பிடிபட்டது. அதனை வனத்துறையினர் பவானிசாகர் அணை பகுதியில் விடுவித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் பகுதியில் சுமார் 8அடி ஆழமுள்ள குட்டை உள்ளது. குட்டையில் 6 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அப்பகுதி வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் குட்டையில் முதலையின் நடமாட்டம் இருப்பதை பார்த்துள்ளனர்.

இது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக சிறுமுகை வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்காக நேற்று முன்தினம் நைலான் வலை கட்டி குட்டையில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து இரவு வேளையிலும் பணி தொடர்ந்தது. ஆனால் முதலை பிடிபடவில்லை. இந்நிலையில் 2ம் நாளாக நேற்று சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் நீண்ட நேரமாக போராடி குட்டையில் இருந்த தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர்.

அப்போது குட்டையில் சுமார் 15 அடி நீளமுள்ள ராட்சத முதலை இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து லாவகமாக அதனை பிடிக்க முற்பட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் முதலையை பிடித்தனர். பின்னர் முதலையை கயிறு, வலைகளால் கட்டி வாகனத்தில் ஏற்றி, பவானிசாகர் அணை பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆழம் அதிகமுள்ள பகுதியில் முதலையை விடுவித்தனர். முதலை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

The post கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,KOWAI ,METUPPALAYAM ,KOWAI DISTRICT ,PELLEPALAYAM ,Dinakaran ,
× RELATED தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து கிடுகிடு உயர்வு