×
Saravana Stores

மணல்மேடு முட்டம் பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்பது எப்போது?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


மயிலாடுதுறை: கடலூர் மாவட்டத்தின் கடைகோடி தாலுகாவாக காட்டுமன்னார்கோவில் உள்ளது. இது தென்மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான பகுதியாக உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆறு உள்ளதால் மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டத்திற்கு 50 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டியிருந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முயற்சியால் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே முட்டம் பாலம் கட்டுவதற்கு நபார்டு வங்கி உதவியுடன் ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து 2011ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முட்டம்- முடிகண்டநல்லூர் இடையேயான பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. இரண்டரை ஆண்டுகளில் பணிகள் முடிந்து 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாலம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக 6 மாதங்களுக்கும் மேலாக திறப்பு விழா காணப்படாமல் கிடப்பில் இருந்தது. இதையடுத்து ஆட்சி மாற்றத்தால் பல மாதங்களுக்கு முன் முட்டம் பாலம் திறக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இந்த பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்கவில்லை. முட்டம் பாலம் திறக்கப்பட்டும் மயிலாடுதுறையில் இருந்து இந்த பாலத்துக்கு மணல்மேடு வழியாக 2 கிமீ தொலைவுக்கு இணைப்புச்சாலை அமைக்கப்படாமல் இருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து வடலூர், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், மணல்மேடு, மயிலாடுதுறை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்ல சுலபமான வழியாகும். தற்போது முட்டம் பால இணைப்பு சாலை திட்டத்திற்கு நில எடுப்பு செய்யப்பட்டு விட்டதாகவும், ரூ.22 கோடி நிதியை அரசு ஒதுக்கினால் வேலை விரைவில் துவங்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே முட்டம் பாலத்துக்கு இணைப்பு சாலையை விரைவில் அமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மணல்மேடு முட்டம் பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்பது எப்போது?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sandammadu Mutam Bridge ,Mayiladuthura ,Cuddalore district ,Tatumannargo ,Taluga ,Mayiladuthura, Tanjai, Nagai district ,Katumannargo ,Sandalmadu Mutum Bridge ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!